முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அகற்றும் பணி தீவிரம்

புதன்கிழமை, 10 ஜூன் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் மேகி, வாய் வாய் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட், ஸ்மித் அண்டு சிக்கன் மசாலா ஆகிய 4 நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அகற்றும் பணியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

32 குழுக்கள் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 584 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு கடைகளில் நூடுல்ஸ் பாக்கெட்டு விற்பனை குறித்து ஆய்வு செய்து அங்கு பாக்கெட்டுகள் இருந்தால் அவற்றை விற்க கூடாது எனவும், திருப்பி எடுத்து செல்ல நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் வகைகள் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டு சோதனை நடந்து வருகிறது.இதற்கிடையில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் வகைகள் தவிர பிற நூடுல்ஸ் வகைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து சேகரிக்கப்படும் நூடுல்ஸ் மாதிரிகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த முடிவுகள் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.அண்ணாநகர், கீழ்பாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டன. இதில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் பெட்டிகள் நூற்றுக்கணக்கானவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து எடுத்து செல்ல உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நூடுல்ஸ் போல பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களையும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பால், குடிநீர், தண்ணீர் கேன், டீத்தூள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களின் தரத்தையும் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காய்கறி, பழங்கள், சாக்லேட், ஐஸ்கீரிம் வகைகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலப்பதாக தெரிகிறது.
அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள அத்தகைய உணவு பொருட்களும் விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் டீத்தூளில் கலப்படம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் உள்ளிட்ட போலியானவை கடைகளில் விற்கப்படுவதால், டீக்கடையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் புகார் வந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கலப்பட டீத்தூள் விற்பனை அமோகமாக நடப்பதாக கூறப்படுகிறது. அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் அனைத்து வகை நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

நேற்று நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள முக்கிய கடைகளில் அனைத்து வகை நூடுல்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள், திண்பண்டங்கள், குளிர்பானங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து