முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த அரசியல் பின்னணி சதி: சரத்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 18 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

மதுரை: நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னால் அரசியல் சதி இருப்பதாக எம்.எல்.ஏவும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் சதி இருப்பதை கண்டு கவலைப்படவில்லை என்றும் நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சரத்குமார் அணிக்கும், நாசர், விஷால் உள்ளிட்டோர் தலைமையில் தனிப் பிரிவாக செயல்பட்டு வரும் இன்னொரு குழுவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு எமது ஆதரவு உண்டு. இவர்களே இறைவன் நிறுத்தியுள்ள அணி என்று மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறியிருந்தார். இதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக சரத்குமார் நேற்று மதுரை ஆதீனத்தை சந்தித்துப் பேசினார். ஆதினத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். காம்பளக்ஸ் கட்டுவதற்கென சில விதிகள் இருக்கின்றன. குற்றம்சாட்டுபவர்களை சகோதர்களாகவே கருதுகிறேன். சங்கத்தில் என்ன முறைகேடு நடந்தது என்பதை புகார் கூறுபவர்கள் நிரூபிக்கட்டும் என்றும் கூறினார்.

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தெரிகிறது. அரசியல் சதி இருப்பதை கண்டு கவலைப்படவில்லை. நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும் என நம்புகிறேன். எங்களது தலைமையில் நடிகர் சங்கம் கட்டுக்கோப்புடன் தொடர்ந்து செயல்படும். சங்கத்தின் புகழுக்கு குமரிமுத்து களங்கம் விளைவித்தார். இதனால் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்றும் சரத்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து