முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரடி கியாஸ் மானியம் பெற காலக்கெடு 30-ந்தேதியுடன் முடிகிறது

வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வங்கி கணக்கில் நேரடி மானியம் பெறுவதற்கான காலக்கெடு 30-ந்தேதியுடன் முடிகிறது. இதுவரை 88.4 சதவீதம் பேருக்கு அவர்களது வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகிப்பதில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தமிழகத்தில் கடந்த 15-ந்தேதி நிலவரப்படி 88.4 சதவீதம் பேர் இந்த திட்டத்தில் இணைந்து மானியத்தை நேரடியாக பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தில் இணைவதற்கான காலஅவகாசம் 30-ந்தேதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படியானால் இத்திட்டத்தில் இன்னும் சேராமல் இருக்கும் 11.6 சதவீதம் பேருக்கு சமையில் கியாஸ் மானியம் கிடைக்குமா? 30-ந்தேதிக்கு பிறகும் விடுபட்டு போனவர்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் கியாஸ் ஆகிய 3 நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54 லட்சத்து 26 ஆயிரத்து 780 சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் 91 லட்சத்து 40 ஆயிரத்து 464 வாடிக்கையாளர்களுக்கும், இந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் 23 லட்சத்து 20 ஆயிரத்து 437 வாடிக்கையாளர்களுக்கும், பாரத் கியாஸ் நிறுவனம் 39 லட்சத்து 65 ஆயிரத்து 879 வாடிக்கையாளர்களுக்கும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்து வருகின்றன.

சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்ணை டீலர்களிடம் காண்பித்து இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி மார்ச் மாதம் வரை 86 சதவீதம் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்தனர்.எஞ்சியவர்களையும் இந்த திட்டத்தில் சேர்ப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதம் காலஅவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான மானியமும் வழங்கப்படும்.

இந்த மாதத்துக்குள் இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கு அவர்கள் எப்போது இந்த திட்டத்தில் முறையாக இணைகிறார்களோ அப்போது முதல் மானியம் வழங்கப்படும். அதுவரை அவர்கள் கியாஸ் சிலிண்டர்களை சந்தை விலையில் தான் வாங்க முடியும்.

நேரடி மானியம் பெறும் திட்டத்தில் கடந்த 15-ந்தேதி நிலவரப்படி இந்தியன் ஆயில் நிறுவனம் 89.38 சதவீதமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் 86.46 சதவீதமும், பாரத் கியாஸ் 86.46 சதவீதத்தையும் எட்டியுள்ளது. 3 நிறுவனங்களும் சேர்ந்து சராசரியாக 88.4 சதவீதம் பேரை இந்த திட்டத்தில் இணைத்துள்ளது. விடுபட்டவர்களையும் இந்த திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை வைத்திருப்பவர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அப்படி ஒன்றுக்கு மேல் இணைப்புகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களே தங்கள் டீலர்களிடம் சரண்டர் செய்துவிட்டால், அதற்கான டெபாசிட் தொகை வழங்கப்படும். எண்ணெய் நிறுவனத்தால் கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து