முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர்கள் விஷால், நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர் : பொதுச் செயலாளர் ராதாரவி நீதிமன்றத்தில் பதில் மனு

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை மிரட்டும் நோக்கில் நடிகர்கள் விஷால், நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.  நடிகர்கள் விஷால் கிருஷ்ணா, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தென்னிந்திய நடிகர்கள் சங்கம் 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 6 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

நாங்களும் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம்.  சங்க விதிப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். விதிப்படி, தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஒரு தேர்தல் அதிகாரி, இரண்டு உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.  2015 - 18-ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் என தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கடந்த 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். 

வார நாள்களில் பெரும்பாலான நடிகர்கள் வேலையாக இருப்பார்கள். சினிமா சங்கங்கள் அதற்கான தேர்தலை கட்டாய விடுமுறை நாளான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தும்.  தேர்தல் நடைமுறை ஏதும் பின்பற்றாமல் சங்க நிர்வாகிகள் அவசர அவசரமாக தேர்வு செய்யப்பட்டனர். இப்போதும் தேர்தல் அதிகாரியை தன்னிச்சையாக சங்க நிர்வாகிகள் நியமித்துள்ளனர்.  அதனால் இந்தத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எங்களது சங்கத்தில் 3,200 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.  ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. 

வார விடுமுறை நாள்களில் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோருவதை ஏற்க முடியாது. இதற்கு முன்பு வார நாள்களில் தேர்தல் நடந்துள்ளது. அப்போது 75 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என உறுதியாக இருப்பவர்கள் வார நாள்களில் வந்து வாக்களிப்பதில் சிரமம் இருக்காது. தேர்தல், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் காலை 9 மணிக்குதான் தொடங்கும். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 வரை போக்குவரத்து நெரிசல் குறைவாகதான் இருக்கும். அந்த நேரத்தில் உறுப்பினர்கள் வந்து வாக்களிக்கலாம்.  தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி உள்ளது.

இது தவிர, ஏ.வி.எம். ஸ்டுடியோ வளாகத்திலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் தேதி குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் மட்டுமே ஆட்சேபனைத் தெரிவித்துள்ளனர். சங்கத்துக்கும், தனியார் திரைப்பட நிறுவனத்துக்கும் இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் திரும்பப் பெறத் தயாராக இருப்பதை மறைமுகமாகக் கூறியுள்ளனர். நடிகர் சங்கத்தை மிரட்டும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூன் 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து