முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 89 மையங்களில் நர்சு பணிக்கு எழுத்துத்தேர்வு

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் 89 மையங்களில், நர்சு பணிக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களை நிரப்பவும், புதிதாக நியமிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டது. இதையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) 7,243 நர்சு பணியிடங்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இதில் 6 ஆயிரத்து 792 நர்சு பணியிடங்கள் பெண்களுக்கும், 451 நர்சு பணியிடங்கள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்து 432 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, நர்சு பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை ஆகிய 5 நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, அரசு காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 16 மையங்களில் எழுத்துத்தேர்வு நடந்தது. சென்னையில் உள்ள மையங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வாளர்களின் உறவினர்களும் உடன் வந்திருந்தனர். சில பெண் தேர்வர்கள் தங்களது கணவர் மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தது. தேர்வு முடியும் வரையில் உறவினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கல்லூரி வளாகங்களில் பரபரப்புடன் வலம் வந்துகொண்டிருந்தனர். தேர்வு நடக்கும் அறைகளின் வெளியேயும், வளாகத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் ½ மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும்.

சென்னை அரசு காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதிய சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்ற இளம்பெண் கூறியதாவது:-

எழுத்துத்தேர்வு எளிதாகவே இருந்தது. குறிப்பாக உளவியல் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தது. எல்லா கேள்விகளும் மருத்துவம் சார்ந்தே கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக 120 கேள்விகளுக்கும் மேல் சரியான விடையை பதிவு செய்யலாம். அந்த அளவுக்கு தேர்வு எளிதாகவே இருந்தது. எப்படியும் அரசு பணியில் சேர்ந்துவிடுவேன் என்று நம்புகிறேன். எனது முழுமையான உழைப்பினை வெளிப்படுத்தி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பெரும்பாலான தேர்வர்கள் இதே கருத்தினை தான் வெளிப்படுத்தினர். தமிழகம் முழுவதும் 89 மையங்களில் நடந்த நர்சு பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 40,432 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 38 ஆயிரத்து 116 பேர் மட்டுமே தேர்வினை எழுதியுள்ளனர். 2 ஆயிரத்து 316 பேர் வரவில்லை.

இந்த தகவலினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து