முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி,ஸ்டாலின்க்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  திமுக ஆட்சியில் 3 சதவீத பணிகள்தான் நடைபெற்றது என்றும் அதிமுக ஆட்சியில்தான் 73 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  கூறியிருப்பதாவது:

எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை மாநகரத்தில் மெட்ரோ இரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை சென்னை நகர மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.   எனவே தான், மெட்ரோ இரயில் சேவையை விரைந்து வழங்கியமைக்கு எனக்கும், எனது அரசுக்கும், சென்னை நகர மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத திமுக தலைவர் கருணாநிதியும்,   திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த சென்னை மெட்ரோ இரயில் திட்டமே முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் என்றும்,  இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எனது தலைமையிலானஅதிமுக அரசு கால தாமதம் ஏற்படுத்தியது என்றும் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் குறித்து தெரிவித்த பதிவுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.   கருணாநிதி, 30.6.2015 அன்று வெளியிட்டு உள்ள அறிக்கையிலும், இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டது என்றும், கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மக்களை குழப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தவறான தகவல்களை தொடர்ந்து தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்து வருவதால், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் பற்றிய பல்வேறு உண்மைகளை தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறேன்.  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் தான், வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித்தடம் என இரு வழித்தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இது தான் வரலாறு. 

இதிலிருந்தே, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு வித்திட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மெட்ரோ இரயில் என்பது தரைக்கு அடியில் செயல்படுத்தப்படும்  ஒரு  திட்டமாகவே    உலகெங்கும் உள்ளது. சென்னையில் பல இடங்களில் தெருக்கள் குறுகலாகவும், வீடுகள் நெருக்கமாகவும் உள்ளதாலும்; பல இடங்களில் பழமை வாய்ந்த வீடுகள் உள்ளதாலும்; தரைமட்டத்திற்கு கீழ் சுரங்கப்பணிகள் மேற்கொள்வது கடினமானதாகவும், காலதாமதம் ஏற்படுவதாகவும் அமையும் என்பதால், மெட்ரோ ரெயிலுக்கு பதில் ‘மோனோ’ ரெயில் விரைந்து முடிக்க இயலும்  என்பதாலும் தான், சென்னையில் மெட்ரோ ரெயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு  2004-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு  உத்தரவு வழங்கியிருந்தாலும், விரைந்து செயல்படுத்தக் கூடிய  தரைக்கு மேல் மட்டத்தில் நிறுவப்படும் ‘மோனோ’ ரெயிலே சிறந்ததாக இருக்கும் என 2005 ஆம் ஆண்டு  எனது அரசால் முடிவெடுக்கப்பட்டது.

இதையே உறுதி செய்யும் வகையிலே தான், 2007 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது,  திட்ட அறிக்கையை தயாரித்த டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம், அனைத்து வழித்தடங்களும் தரைக்கு மேல் மட்டத்தில் இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.  எனினும், பல்வேறு காரணங்களினால் மெட்ரோ ரெயில் திட்டத்தின் சுமார் 53 சதவீத பகுதி  தரைக்கு அடியிலும்; 47 சதவீத பகுதி தரை மட்டத்திலும்,  உயர் மட்டத்திலும் தற்போது செயல்படுத்தப்படுகிறது.   மெட்ரோ ரெயில்  திட்டத்தினை விரைந்து செயல்படுத்தும் அதே வேளையில், மெட்ரோ ரெயில்  செயல்படுத்த இயலாத பகுதிகளில் மோனோ ரெயில்  திட்டத்தினை செயல்படுத்த நாங்கள் முடிவெடுத்து, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரெயில்  திட்டம் என்பது முந்தைய திமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதும், திமுக ஆட்சியில் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது என்பதும் வடிகட்டிய பொய்கள் தான்.  நான் ஏற்கெனவே தெரிவித்தப்படி, இத்திட்டத்திற்கு வித்திட்டதே எனது தலைமையிலான முந்தைய அரசு தான். திட்ட வடிவமைப்பிற்கு நாங்கள் தெரிந்தெடுத்த ஆலோசகரான டெல்லி மெட்ரோ ரெயில்  நிறுவனம் தான் இந்தத் திட்டத்தையும் வடிவமைத்தது.

2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமைக்கப்பட்டதும், 24.6.2006 அன்று சட்டப்பேரவையில் தமிழக  கவர்னர் ஆற்றிய உரையிலேயே, சென்னை மாநகருக்கு மெட்ரோ ரெயில்  திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.   பின்னர் 30.6.2006 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மெட்ரோ ரெயில்  மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால் மோனோ ரெயில்  திட்டம் கைவிடப்பட்டு, மெட்ரோ ரெயில்  திட்டம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மெட்ரோ ரெயில்  நிறுவனம் விரிவான வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.   அதன் பின்னர், இதற்கான ஒப்புதல் 7.11.2007 அன்று தான்  முந்தைய திமுக அரசால் வழங்கப்பட்டது.  முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கெல்லாம் ஆதரவு அளித்து, அந்தக் கூட்டணி அரசுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றி வந்த திமுகவால், இத்திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதலை 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பெற முடிந்தது. 
மேலும், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மெட்ரோ றுரயில்  நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முந்தைய திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் தான், அதாவது 15.2.2011 அன்று தான் ஏற்படுத்தப்பட்டது.  இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய தொகையைக் கூட உரிய காலத்தில் முந்தைய திமுக அரசால் பெற இயலவில்லை. 

26.8.2010 அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு  பதில் அளித்துப் பேசிய  மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர்  சௌகத் ராய்,  “தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அதனால் 2010-11ஆம் ஆண்டுக்கு மத்திய அரசால் 652 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்தும் அந்த நிதி விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.   மத்திய அரசிடமிருந்து உரிய காலத்தில் மத்திய அரசின் பங்கை திமுக அரசு பெறாத காரணத்தால், பல கோடி ரூபாய் இழப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சென்னை மெட்ரோ றுரயில்  திட்டத்திற்காக, 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செலவிடப்பட்ட தொகை  வெறும் 1,143 கோடி ரூபாய் மட்டுமே.  ஆனால், 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை, இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 9,229 கோடி ரூபாய் ஆகும்.  இதுவரை முடிந்துள்ள 76 விழுக்காடு பணிகளில், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 3 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.  ஆனால், எனது ஆட்சிக் காலத்தில் தான் 73 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.    இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை  ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, அதன் பணிகள் குறித்த காலத்தில் முடிந்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.  சென்னை மெட்ரோ ரெயில்  திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 59 சதவீதம் அளவிற்கு கடன் வழங்குகிறது.  இந்தக் கடனையும் பெற  தான் ஜப்பானுக்கு சென்று ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதலை பெற்றதாக மற்றொரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்  ஸ்டாலின்.  ஸ்டாலின் ஜப்பான் சென்றது 6.2.2008 அன்று தான்.  ஆனால் 23.4.2007 அன்றே  சென்னை மெட்ரோ ரெயில்  திட்டத்தை ஜேஐசிஏ-விற்கான கடன் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. 

மேலும், 23.5.2007 நாளிட்ட கடிதத்தின்படி, 2007-2009 ஆண்டுகளுக்கான ஜேஐசிஏ சுழல் திட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில்  திட்டம் சேர்க்கப்பட்டு விட்டது.  இதன் அடிப்படையில் ஜேஐசிஏ நிறுவனம் ஜுன் 2008ல் கடன் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து