முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரெயில் திட்டம் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: மெட்ரோ ரெயில் திட்டம் எப்போது நிறைவேறும் என்பது குறித்து தவறான தகவலை அளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன் பிறகு ஸ்டாலின் மவுனமாகிவிட்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு திட்டம் எனது ஆட்சியில் நிறைவேறப் போகிறது என்றால், அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு, தான் தான் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில், உடனே அந்தப் பகுதிக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான் திறந்து வைக்க இருக்கிறேன் என்பதை அறிந்த ஸ்டாலின், அந்தத் திட்டத்தை எனது தலைமையிலான அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  ஆனால், ஸ்டாலின் பேட்டி அளித்த இரண்டு மாதங்களில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்னால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இதே போன்று, தற்போது வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
இதற்கான சோதனை ஒட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சோதனை ஒட்டம் நடக்க உள்ளதை தெரிந்து கொண்ட  ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. சார்பில் வேலூரில் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, அந்த ஆர்ப்பாட்டத்திலே கலந்து கொண்டு, 25 விழுக்காடு பணிகள் தான் முடிவுற்றுள்ளன என்று ஒரு கட்டுக்கதையை கட்டவிழ்த்து விட்டார். அதே அடிப்படையில் தான்,  சென்னை மெட்ரோ இரயில் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது என்பதையும், மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு தேவையான சட்டப்பூர்வ பாதுகாப்பு அனுமதி வழங்குவது தொடர்பான பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்பதையும் தெரிந்து கொண்ட  ஸ்டாலின், கடந்த மார்ச் 10-ந் தேதி திமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், மெட்ரோ இரயிலை உடனே இந்த அரசு தொடங்கி வைக்க வேண்டும்.   இல்லாவிட்டால், சென்னையில் உள்ள நான்கு மாவட்ட திமுக சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்.  எங்கள் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டால், சிறையும் நிரப்பத் தயாராக இருக்கிறோம்  என்று வாய் சவடால் விட்டார்.  இந்த வாய் சவடாலோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.  இன்னும் ஒரு படி மேலே சென்று  19.3.2015 அன்று, தலைமைச் செயலாளருக்கும்; திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளருக்கும் ஒரு கடிதத்தை எழுதினார் 
ஸ்டாலின். அதில்  இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்; ஆனால், தற்போதைய  அதிமுக அரசு அதனை நிறுத்தி விட்டது என்றும்  தெரிவித்ததோடு; கோயம்பேடு ஆலந்தூர் இடையில் வணிக ரீதியான மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு உடன் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும்; அவ்வாறு வழங்கப்படவில்லையெனில், சட்டப்படியான நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும், மிரட்டும் தொனியில் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். 
பிறர் சொல்வது சரிதானா என்பதை தெரிந்து கொள்ளாமலேயே கருத்துகள் தெரிவிப்பதும், அறிக்கைகள் வெளியிடுவதும், திரு கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கை வந்த கலை தான்.  அதனால் தான் மெட்ரோ ரெயில் திட்டம், 2014ல் முடித்திருக்க வேண்டும் என்று, 10.3.2015 அன்று ஒரு பொதுக்  கூட்டத்தில்  பேசியவர், இந்தக் கடிதத்தில் 2012-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
ஸ்டாலினின் கடிதத்திற்கு திட்டம், வளர்ச்சி மற்றும்  சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு செயலாளர், 15.4.2015 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.  அந்தக் கடிதத்தில்,  சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களின் விவரத்தை தெரியப்படுத்தி, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தப் படியே 31.12.2015 அன்று தான் இந்த திட்டம் முடிப்பதற்கான வரையறை என்றும், 2012 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது தவறு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.  மேலும், ஆண்டு வாரியாக இத்திட்டத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகையும்,  பணிகளின் முன்னேற்றம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.  அதில், 2007-08 முதல் 2010-11 வரையிலான காலத்தில், 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பதையும்; 2011-12 முதல் 2014-2015 வரை 9,229 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதையும்;  மே 2011 வரை 3 சதவீதமாக இருந்த பணி முன்னேற்றம், தற்போது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 
மேலும், சென்னை மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதற்கான மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் இன்னமும் பெறப்படவில்லை என்றும், அது கிடைக்கப்பெற்ற பின்னரே மெட்ரோ இரயில் இயக்குவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற இயலும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன்,  ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்;  உண்மை நிலையை தனது கடிதத்தில் தெரிவித்ததற்கு பின்னரும், வழக்கு தொடரும் நடவடிக்கையை மேற்கொண்டால், அதனால்  ஸ்டாலினுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு  அவரே பொறுப்பு எனவும் அந்தக் கடிதத்தில் அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.  மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படவில்லை என்பதையும்,
எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு தான் முழுவீச்சுடன் இந்த திட்டத்தினை செயல்படுத்தியது என்பதையும், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்படாமல் மெட்ரோ இரயிலை வணிக ரீதியாக இயக்க இயலாது என்பதையும், அதன் பின்னர் தெரிந்து கொண்ட ஸ்டாலின், மெட்ரோ இரயில் திட்டம் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாய் சவடாலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
ஆனால், 30.6.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் மு.கருணாநிதி, மெட்ரோ ரெயில் தொடங்குவதை தள்ளிக் கொண்டே போனால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என   ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்குப் பிறகு, வேறு வழியில்லாமல் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.    ஸ்டாலினுக்கு அரசு செயலாளர் அனுப்பிய கடிதத்தை   ஸ்டாலினிடம் இருந்து வாங்கிப் படித்து, உண்மை நிலையை கருணாநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து