முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வாசன் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) 1957 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கான நிலம், உழைப்பு அனைத்தும் தமிழகத்தை சார்ந்தே உள்ளதால் லாபத்தை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்றைய பாரதப் பிரதமருக்கு பெருந்தலைவர் காமராஜர் கோரிக்கை வைத்தார்.இங்கு சுமார் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் ஆயிரத்து 100 மெகா வாட் தமிழகத்திற்கும், மீதமுள்ள 60 சதவீத மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும், அந்நிறுவனம் பெற்ற நவரத்னா அந்தஸ்திற்கும் பணியாளர்கள் தான் மிக முக்கிய காரணம்.

இந்த நிறுவனத்தில் சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்; இது தவிர ஆயிரக்கணக்கில் ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தம் 31.12.2011 அன்று முடிந்தது. 01.01.2012 முதல் இன்று வரை சுமார் 41 மாதங்கள் ஆகியும் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.என்.எல்.சி. நிர்வாகம் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி அவர்களது போராட்டத்திற்கு தடை வாங்கியுள்ளது. நிர்வாகம் தொழிலாளர்களையும், தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் என்.எல்.சி தொழிற்சங்கங்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக இன்று முதல் வருகின்ற 18 ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், 18 ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிப்பதோடு, சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.எனவே தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி என்.எல்.சி. பணியாளர்களுக்கு சுமூக தீர்வு கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு நேரடியாக என்.எல்.சி. நிறுவனத்துடனும், தொழிற் சங்கங்களுடனும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து