முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்புக்குட்டியை சிவபாலன் ஆக்கிய அஜித்

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இதுவரை சினிமாவில்கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார். அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியத்தைவிட அந்த புகைப்படங்களை எடுத்தவர் தான் அவரை ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஆமாம், நடிகர் அஜித்குமார்தான் அவரை புகைப்படம் எடுத்த புகைப்பட நிபுணர். இதுகுறித்து அப்புக்குட்டி கூறும்போது, ‘வீரம்’ படப்பிடிப்பின்போது அஜித் சார் என்னிடம் தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்தவரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள்.

கிராமிய படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார். என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க, யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29-ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன். எங்கே, என்ன, எது எனக் கேட்காமல், அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போகிறார் என்று. அதை விட ஆச்சரியம் என்னவென்றால், என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்கபட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட பிரத்யேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப்படுத்தி இருந்தார்.

ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை. தவிர எனது இயற்பெயரைக் கேட்டு தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவபாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கப்படுவதை விரும்புகிறேன். ஒரு கைதேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னை பரவசம் ஊட்டியது.. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும் என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து