முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பயணம்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, விடுமுறை தினமான நேற்று முன் தீனம் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

சென்னை கோயம்பேடு- – ஆலந்தூர் இடையேயான முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையை 29–ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த சேவை ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய 7 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய பாதையில் முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு சென்னை மக்கள் மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வருகை தரும் மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்கள் சுற்றுலா தலம் போல் காட்சியளிக்கின்றன.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வார நாள்களைக் காட்டிலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தது. காலையிலிருந்து மாலை வரை பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்த குழந்தைகள் புதுவித உற்சாகம் அடைந்தனர். எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் உரிய டிக்கெட்டுகள் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய மக்கள் சென்றனர். மேலும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்து இருந்ததால் மெட்ரோ ரெயில் நடைமேடை மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

மெட்ரோ ரெயிலுக்கான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஆர்வமாக பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன், ரெயில் ஏற காத்திருந்தனர். மெட்ரோ ரெயில் வந்ததும், உற்சாகமாக அதில் ஏறி குழந்தைகள் பயணம் செய்தனர். தங்களது செல்போனில் ‘செல்பி’யும் எடுத்து மகிழ்ந்தனர். ஆலந்தூர் வரை சென்ற அவர்கள் மீண்டும் கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரெயில் மூலம் வந்தனர். இந்த பயணத்தை குழந்தைகள் ரசித்து அனுபவித்தபடி சென்றனர்.

ஆலந்தூரில் இருந்து சுமார் 10 நிமிஷத்துக்குள் ஒரு ரயில், இரண்டு நடைமேடையிலும் மாறி மாறி இயக்கப்பட்டன. மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆலந்தூர் ரயில் நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். இதனால், இந்த ரயில் நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சுற்றுலா தலம் போல் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து