முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து ஐ.சி.எப். சாதனை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, இந்திய ரெயில்வேக்கு 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியைத் தயாரித்து சென்னை ஐ.சி.எப். (இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) சாதனை படைத்துள்ளது.

மின்சார பயன்பாட்டை குறைக்க சூரிய ஒளி தகடுகளுடன் ரெயில் பெட்டி  தயாரிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு  தெரிவித்துள்ளார்.

சென்னை  பெரம்பூரில் உள்ள  ஐ.சி.எப். கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் ரெயில் பெட்டிகள்  தயாரிக்கப்பட்டு மண்டல ரெயில்வேக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.சி.எப்.  தற்போது 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியை (3–ம் வகுப்பு ஏ.சி.) தயாரித்துள்ளது.

இந்த ரெயில் பெட்டி  தொடக்க விழா மற்றும் துருப்பிடிக்காத இரும்பு மூலம் ரெயில் பெட்டிகள்  தயாரிக்கும் புதிய பிரிவு அர்ப்பணிக்கும் விழா ஆகியவற்றை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுடெல்லியில் உள்ள ரெயில்வே வாரிய அலுவலகத்தில்  இருந்தப்படியே வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) மூலம் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

அதே சமயத்தில்  சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். பணிமனையில் நடைபெற்ற விழாவில் ரெயில்வே  வாரிய உறுப்பினர் (மெக்கானிக்கல்) ஹேமந்த் குமார், நிதி ஆயோக் (திட்ட  கமிஷன்) உறுப்பினர் வி.கே.சரஸ்வத், ஐ.சி.எப். பொதுமேலாளர் அசோக் அகர்வால்,  ரெயில் பெட்டி தொழிற்சாலையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு கொடி அசைத்து இதன் ஓட்டத்தை துவக்கினர்.

50  ஆயிரமாவது ரெயில் பெட்டியில் பயணிகள் உள்ளே நுழையும் இரண்டு வாசல்களிலும்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ரெயில்  பெட்டியின் உள்ளே நுழையும் நபர்களை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு  அனுப்பிவிடும். இதனால் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாது.விழாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:–-

ரெயில்வே  வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஐ.சி.எப். தயாரித்த முதல்  பெட்டிக்கும், தற்போது தயாரிக்கப்பட்ட 50 ஆயிரமாவது ரெயில் பெட்டிக்கும்  தரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் உள்ளன. மாற்றங்களை  கொண்டுவரும் ஐ.சி.எப். ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும்,  நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.சி.எப்.பிற்கு ரூ.5 லட்சம்  ஊக்கத்தொகை வழங்கப்படும்.
50 ஆயிரமாவது பெட்டி தயாரித்த இந்த  வேளையில் ஒரு லட்சமாவது பெட்டி எப்படி இருக்கும் என்ற கற்பனை  செய்துபார்க்கிறோம். அந்த பெட்டி தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை  பெறுவதற்கு இப்போதில் இருந்தே திட்டமிட்டு வருகிறோம். ரெயில் பெட்டிகளை  தயாரிப்பதற்கு மூலப்பொருள் மேலாண்மை அவசியம்.மூலப்பொருள்களின்  தன்மைகளை ஆராய்வதற்காக பனாரசஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று உற்பத்தி பிரிவினை  மேம்படுத்துவதற்கு திட்டக் கமிஷன் உறுப்பினர், ரெயில்வே வாரிய  உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள்  மேல்புறமாக இருக்கைகளுக்கு ஏறி செல்லும் படிகள், குப்பை தொட்டிகள்,  கழிவறைகள் உள்பட ரெயில் பெட்டியின் உள்புற கட்டமைப்புகள் பயணிகளுக்கு  சுமுகமானதாக அமையும் வகையில் மாற்றம் செய்யப்படும். இதற்காக தேசிய  வடிவமைப்பு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது.மின்சார  தேவைப்பாட்டை கணிசமாக குறைக்கும் வகையில் ரெயிலுக்கு சூரிய ஒளி மூலம்  மின்சாரம் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக இந்திய அறிவியல் கழகத்தோடு  (ஐ.ஐ.எஸ்.) இணைந்து ரெயில் பெட்டியில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

ரெயில்வே  நிதி நெருக்கடியில் உள்ளது. இருந்தபோதிலும் மக்கள் கட்டணம் செலுத்த தயாராக  இருந்தால் உலக தரம் வாய்ந்த சேவைகளை கொடுப்பதற்கு ரெயில்வே தயாராக  இருக்கிறது. துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் ரெயில் பெட்டிகள்  தயாரிக்கும் பிரிவு இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இதில் 100  ரெயில் பெட்டிகள் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.சி.எப். வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கடந்த நிதியாண்டில் மட்டும் ஐ.சி.எப். 1,704 ரெயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த இலக்கை ஐ.சி.எப். தனது வரலாற்றில் முதல் முறையாக எட்டியது.

ரெயில்வே வாரியத்தின் வழிக்காட்டுதலின்படி துருப்பிடிக்காத ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள்
தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, எடைக் குறைவான- நீளமான பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள் தயாரிப்பதன் மூலம் ஒரு பெட்டியில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்தப் பெட்டிகள் எடைக் குறைவாக இருப்பதால் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வேகம் வரை ரெயில்களை இயக்க முடியும். கடந்த நிதியாண்டின் முடிவில் 65 எடை குறைந்த பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருப் பிடிக்காத பெட்டி தயாரிக்க ரெயில்வே வாரியம் ரூ. 327 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் இயங்கும் டீசல் – எலக்ட்ரிக் ரெயில்களைத்  அதிக அளவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தேவை அதிகம் இருப்பதால், 360 டீசல் – எலக்ட்ரிக் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து