முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கீதத்தில் திருத்தம் செய்யச் சொல்வதா?: ஜி.கே.வாசன் கண்டனம்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– பா.ஜ.க.வின் மூத்த தலைவர், ஆளுநர் கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது தேசிய கீதத்தில் திருத்தம் தேவை என பேசியிருப்பது ஏற்புடையதல்ல. தேசிய கீதத்தில் "ஜன கண மன அதிநாயக ஜெய ஹே" என்ற முதல் வரியில் இடம் பெற்றிருக்கும் "அதி நாயக" என்ற வார்த்தை ஆங்கிலேயரைப் புகழ்வதாக அமைந்திருக்கிறது என்று கூறி அந்த வார்த்தைக்கு பதிலாக "மங்கள்" என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது நமது தேசிய கீதத்திற்கும் அதனை இயற்றிய மகாகவி ரவீந்திரநாத் தாகூரது புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும். ஏனென்றால் நாம் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறுவதற்காக நம் மக்களிடம் விடுதலை வேட்கையையும், தேசப்பற்றையும் உருவாக்கும் வகையில் மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டது தேசிய கீதம். 1911–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27–ந்தேதி முதன் முதலாக கொல்கத்தாவில் தேசிய கீதம் பாடப்பட்டது.

தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் ஆங்கிலேயரை புகழும் வார்த்தைகள் இருப்பதாக அன்றே சர்ச்சை இருந்தது. ஆனால் அந்த தொடர் சர்ச்சையை 1937 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் அதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார். கல்யாண்சிங் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்திய பா.ஜ.க அரசு கல்யாண்சிங் இந்த கருத்துக்கு தகுந்த விளக்கம் தருவதோடு, இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம் நாட்டு மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க உண்மைகளை மதிப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும் யாரும் தடையாக இருக்க கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து