முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் சாதனைகள் நிலைத்து நிற்கும்; அமைச்சர் பா.வளர்மதி

திங்கட்கிழமை, 13 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தேர்தல் களத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க  துணிச்சல் இல்லாமல் வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விட்டு வீராப்பு பேசுவதா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை அமைச்சர் பா.வளர்மதி காட்டமாக தாக்கினார்.

அம்மாவின் சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்; அவரது வெற்றியும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற இமாலய வெற்றியை கொண்டாடும் வகையிலும், அண்ணா தி.மு.க. ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கியும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

விருகை பகுதி அ தி.மு.க. சார்பில் கே.கே.நகர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு விருகை பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கே.மலைராஜன் தலைமை வகித்தார். தென் சென்னை தென் மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:–

ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மா பெற்ற வெற்றி சரித்திரத்தில் எழுதப்பட்ட வெற்றி. இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மா இமாலய வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி அம்மாவின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழக மக்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு இது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு அச்சாரம். ஜெயலலிதா பக்கம் என்றென்றும் மக்கள் சக்தி உள்ளது என்பதற்கு இந்த வெற்றி ஒரு எடுத்துக்காட்டு; எந்த காலத்திலும் அம்மாவை இனி யாராலும் வீழ்த்த முடியாது. அம்மா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் அந்த தொகுதி மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். நாங்கள் ஓட்டு கேட்க சென்றபோது இது அம்மா தொகுதி. முதலமைச்சர் அம்மா இந்த தொகுதியில் நிற்பது பெருமையாக இருக்கிறது. அம்மாவுக்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அம்மா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டிருந்தனர். இந்த தேர்தல் அறிவித்த உடனேயே தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கருணாநிதி கூறினார். அவரைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்கள்.

தேர்தல் என்றால் வெற்றி–தோல்வி வரும். ஆனால் தேர்தல் களத்துக்கே  வரவில்லை. வெளியில் இருந்து கொண்டு பணநாயகம் ஜெயிக்கும். ஜனநாயகம் ஜெயிக்காது என்றார். களத்துக்கு வந்து போட்டியிடாமல் வெளியில் இருந்து கொண்டு இப்படி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை. தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று தெரிந்து கருணாநிதி ஓடிவிட்டார். கருணாநிதி இன்று அல்ல; என்றுமே அவர் எழுந்திருக்க முடியாது. மக்கள் அவரை ஓரம்கட்டிவிட்டனர்.

தேர்தலில் ஒருவர் (டிராபிக் ராமசாமி) நின்றார். ஒவ்வொரு கட்சி தலைவரையும் போய் சந்தித்து ஆதரவு கேட்டார். வெற்றி வீரர் என்று நினைத்து ஆதரவு கேட்டார். ஸ்டாலினிடம் போய் கேட்டார். அவர் தலைவரிடம் கேட்டு சொல்கிறேன். செயற்குழுவை கூட்டி சொல்கிறோம் என்றார். ஒவ்வொருவர் வீட்டு கதவையும் தட்டினார். ஒரே ஆளாக வந்தார். அப்படியே போனார். அம்மா இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்தார்.முதலமைச்சர் அம்மாவை அமெரிக்காவில் இருந்து வரும் பிரபல பத்திரிகை ‘நியூயார்க் டைம்ஸ்’ வெகுவாக பாராட்டி இருக்கிறது.ஜெயலலிதாவுக்காக தமிழகம் முழுவதும் கோவில்களில் அவரது தொண்டர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொண்டர்களை ஜெயலலிதா வைத்திருக்கிறார். அவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தின் அழிக்க முடியாத சக்தி அவர். சிறந்த நிர்வாக திறமை உள்ளவர் என அம்மாவை வெகுவாக அந்த பிரபல பத்திரிகை புகழ்ந்து எழுதியிருக்கிறது.

இதுபோன்று அம்மாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருவதை கண்டு கருணாநிதியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே தான் அம்மா ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இப்படிச் சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை. கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் புழல், திகார் சிறைக்கு அனுப்பாமல் அம்மா ஓய மாட்டார். கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டும். அவரது மகன் ஸ்டாலின் லண்டனுக்கு அடிக்கடி செல்கிறாரே? ஹாங்காங் செல்கிறாரே? அவருக்கு என்ன நோய்? இதனை கருணாநிதி தெரிவிப்பாரா?எங்கள் அம்மாவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அவர் ‘மக்களுக்காக நான். மக்களால் நான்’’ என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார். மக்கள் நலனைப் பற்றியே ஓயாது சிந்தித்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் மகாசக்தியாக இருக்கிறார். வரும் 2016 தேர்தலில் அம்மா அமோக  வெற்றி பெறுவார். என்றென்றும் அம்மாதான் முதல்வர்.இவ்வாறு அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

இந்த கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எவர்சில்வர் குடங்கள், வேட்டி, சேலை ஆகியவைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

கூட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளரும் ‘சிட்கோ’ தலைவருமான ஜே.சி.டி.பிரபாகர் எம்.எல்.எ., ஜெயவர்த்தன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் விழுப்புரம் செல்வராஜ், ஏ.நூர்ஜகான் எம்.சி., மாவட்ட கழக பொருளாளர் தி.நகர்  கோ.சாமிநாதன், எம்.ஜி.பாஸ்கர், ஆர்.ராஜேந்திரபாபு, சொ.கடும்பாடி, கே.தேவகி, எம்.வி.பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அண்ணாமலை, எம்.ஜி.ஆர். நகர்  பாஸ்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பெசன்ட் நகர்  நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுபக்கர் மற்றும் 131–வது வட்டம் (கிழக்கு) ராணி அண்ணாநகர் டி.கோவிந்தன், பொன்னி பி.தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து