முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்லிசை மன்னரின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, தமிழ் திரைப்பட உலகில் சகாப்தமாக திகழ்ந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பின்னணி பாடகிகள் பி.சுசிலா, வாணி ஜெயராம், ஜானகி, நடிகர் சிவகுமார், சீர்காழி சிவ.சிதம்பரம், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், சத்யஜோதி தியாகராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த வண்ணம் உள்ளனர்.மேலும், இசையமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், நடிகர் பிரபு, டி.ராஜேந்தர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவருக்கு முன்னதாக கவிப்பேரரசு வைரமுத்துவும் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சரியாக 12 மணியளவில் சாந்தோமில் உள்ள எம்.எஸ்.வி. வீட்டுக்கு நேரில் வந்தார். எம்.எஸ்.வி.யின் உடலுக்கு மாலை அணிவித்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் ஒரு அற்புதமான மனிதர். கள்ளம், கபடம், பொய், பொறாமை, சுயநலம் இல்லாமல் துறவி போல் வாழ்ந்தவர்,. இந்த மாதிரியான ஒரு மனிதர் சினிமாவில் எந்த துறையிலும் நான் பார்த்ததில்லை. மதிப்புக்குரிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் மிகப்பெரிய வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் எம்.எஸ்.வி., அவர் இல்லையென்றால், கண்ணதாசனோ, வாலியோ, ஸ்ரீதரோ, பாலச்சந்தரோ இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று பேசினார்.

மறைந்த எம்.எஸ்.வி.யின் உடல் இன்று   காலை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட விருக்கிறது. இவரது இறுதி ஊர்வலத்தின்போது ‘இயல் இசை’ குழுவை சேர்ந்த இசை கலைஞர்கள், அவரது பாடல்களை வழிநெடுக பாடி, அவருக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அஞ்சலி

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி.யின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவி: இசை உலகிற்கு எம்.எஸ்.வி.யின் மறைவு மிகப்பெரிய இழப்பு. உங்களுடைய இசையால் நீங்கள் எப்போதும் உயிரோடு வாழ்வீர்கள்.
இயக்குனர் சுசீந்திரன் : சினிமாவும், இசை உலகமும் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானை இழந்து விட்டது.
ஏ.ஆர்.ரகுமான் : கடந்த 40 வருடங்களாக இனிமையான மெல்லிசையால் நம்மை கட்டிப் போட்டவர். அன்புக்குரிய மெல்லிசை மன்னரை இழந்துவிட்டோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவன் ஆசீர்வதிப்பாராக...

பி.சி.ஸ்ரீராம்: முடிவே இல்லாத இசையை உருவாக்கிய மாமனிதன் எம்.எஸ்.வி., அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
நடிகர் விவேக் : ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது! விஸ்வ ‘நாதம்’!  அய்யா! உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும்!

இசையமைப்பாளர் இமான்: எம்.எஸ்.வியின் மறைவு இசைக் குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பு. உங்கள் இசை என்றும் எங்கள் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

மேலும், சிவகார்த்திகேயன், தனுஷ், ஸ்ருதிஹாசன், பாலாஜி மோகன், தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தாயை தெய்வமாக வணங்கிய எம்.எஸ்.வி.

இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 4 வயதில் தந்தையை இழந்து விட்டதால் தாய் அரவணைப்பில்தான் வாழ்ந்தார். இதனால் தாய் நானிக்குட்டி மீது அவர் மிகுந்த மற்றும், பாசமும் மரியாதையும் கொண்டிருந்தார்.
வாழ்நாள் முழுவதும் பெற்ற தாயை தன்னோடு வைத்து பேணி, போற்றிய அவர் தாய் இறந்த பிறகு அவரை தெய்வமாக கருதி வழிபட்டு வந்தார். தினமும் காலையில் குளித்து முடித்ததும் தாய் படத்தை அவர் வணங்காமல் இருந்ததே இல்லை.
அதுபோல வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு செல்லும்போது தாய் படத்தை வணங்காமல் செல்ல மாட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு ஆர்மோனியப் பெட்டியை பொக்கிஷமாக வைத்திருந்தார். முக்கிய நாட்களில் தன் தாய் அந்த ஆர்மோனியப் பெட்டியை வணங்கி, தொட்டு எடுத்து கொடுத்த பிறகே அவர் இசை அமைப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி.யின் இன்னிசைப் பயணம்
திரை இசை உலகில் சரித்திரம் படைத்து, ‘மெல்லிசை மன்னர்’ என உலக தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வாதனின் இயற்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ல் பிறந்த இவர், தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்தார். கண்ணனூரில் உள்ள தனது தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டிலேயே வளர்ந்தார். பள்ளி படிப்பின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருந்த இவர் இசையின் மீது கொண்ட தனியாத தாகத்தால் நீலகண்ட பாகவதர் என்பவரிடம் முறைப்படி கர்நாடக இசையை பயின்று, தனது 13-வது வயதிலேயே மேடை கச்சேரிகளை நடத்தி அற்புதம் நிகழ்த்தியவர். 1940-50-களில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த சி.ஆர்.சுப்புராமன் இசைக் குழுவில் இவர் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக இணைந்தார். அதே குழுவில் வயலின் கலைஞராக பணியாற்றிய டி.கே.ராமமூர்த்தியுடன் இவருக்கு ஏற்பட்ட நெருங்கிய நட்பு, தமிழ் ரசிகர்கள் காதுகளில் தேனை பாய்ச்ச தொடங்கியது. உடல் நலக் குறைவால் சி.ஆர்.சுப்புராமன் மறைந்த பிறகு, அவருடைய இசையில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை சுப்புராமனின் உதவியாளர்களாக இருந்த விஸ்வாதனும், ராமமூர்த்தியும் தங்களது இசையமைப்பால் முடித்துக் கொடுத்தார்கள். இப்படங்களின் இணை இசையமைப்பாளர்களாக இவர்கள் இருவரும் சினிமா துறையில் முதல் தடம் பதித்தனர். இந்தப் படங்களின் பாடல்கள் அந்த காலத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ஒலித்து, படங்களும் வெற்றி பெற்றன. அப்போது, இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இருந்ததுபோல் தமிழில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்களின் இசைப்பயணம் தொடங்கியது. இருவரும் இணைந்து முதன்முதலாக ‘பணம்’ என்ற படத்திற்கு தனித்து இசையமைத்தார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை இருவரும் இணைந்து 700 படங்களுக்கும் மேல் இசையமைத்து காலத்தால் அழிக்க முடியாத சிரஞ்சீவி பாடல்களை ரசிகர்களின் காதுகளில் தாய்ப்பாலாக புகட்டினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டம் சூட்டி, இவர்களுக்கு பெருமை சேர்த்தார். ’நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனையே சேரும். எம்.எஸ்.விஸ்வாதன் தன்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானது என்பது அனைவருக்கும் தெரியும். சினிமா பாடல்கள் தவிர, நூற்றுக்கணக்கான பக்தி பாடல் தொகுப்புகளுக்கும் எம்.எஸ்.வி. பக்தி மணம் கமழ இசையமைத்து, அதன்மூலம் ஆன்மீக சேவைக்கும் தொண்டு செய்துள்ளார். குறிப்பாக, அந்த தொகுப்புகளில் இவர் பாடிய ‘அமரஜீவிதம் சுவாமி’ என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது.

மேலும், எம்.எஸ்.வி., இளையதலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் எந்த தயக்கமும் காட்டியதில்லை. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘செந்தமிழ் பாட்டு’, ‘செந்தமிழ் செல்வன்’ ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும், இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து சமீபத்தில் வெளிவந்த ‘தில்லு முல்லு’ படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு. மேலும், இவருடைய இசையில் பாடிய நிறைய பாடகர்கள் தேசிய விருதுகள் வாங்கி குவித்துள்ளார்கள். குறிப்பாக, அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகங்கள்’ என்ற பாடலை பாடியதற்காக வாணி ஜெயராமுக்கும், உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற ‘நாளை இந்த வேளை பார்த்து’,  சவாலே சமாளி படத்தில் இடம்பெற்ற ‘சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு’ ஆகிய பாடல்களுக்கு பி.சுசிலாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.இசையமைப்பில் பிசியாக இருந்த வேளையிலும், தன்னுடைய சிறு வயது கனவான நடிப்பு துறையிலும் அவ்வப்போது கவனம் செலுத்தினார். ‘கண்ணகி’ படத்தில் சிறு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த அவர் ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இசையமைப்பிலும் பல்வேறு யுத்திகளை கையாள்வதில் எம்.எஸ்.வி. கைதேர்ந்தவர். சிவாஜி கணேசன் நடித்த ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கே நிம்மதி’ என்ற பாடலுக்காக 300-க்கும் மேற்பட்ட வயலின்களை பயன்படுத்தி ஒரு புதிய சாதனையை படைத்தார். இதற்கு மாறாக, ‘பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற ‘தாழையாம் பூ முடித்து’ என்ற பாடலுக்கு இவர் பயன்படுத்திய இசைக் கருவிகளின் எண்ணிக்கை மூன்றே மூன்றுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுபோல் பல்வேறு ஆச்சர்யங்களை தனது இசையில் புகுத்தி அனைவரையும் ரசிக்க வைத்தார் எம்.எஸ்.வி.. அதேபோல், பிறநாட்டு இசையை தமிழ் திரைப்படங்களில் புகுத்தும் புதுவித முயற்சியை முதன்முதலில் செய்ததும் இவர்தான். பெர்சியன் நாட்டு இசையை காவல்காரன் படத்தில் ’நினைத்தேன் வந்தாய்’ நூறு வயது என்ற பாடலிலும், எகிப்து இசையை சிவந்தமண் படத்தில் இடம்பெற்ற ‘பட்டத்து ராணி’ பாடலிலும், ஜப்பான் இசையை உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற ‘பன்சாயி.., காதல் பறவைகள்’ என்ற பாடலிலும், லத்தீன் நாட்டு இசையை சாந்தி படத்தில் இடம்பெற்ற ‘யார் அந்த நிலவு’ என்ற பாடலிலும் கொண்டு வந்து உலக இசையை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அதேபோல், ஒரு பாடலை இருபதே நிமிடங்களில் கம்போஸ் செய்து முடித்த பெருமையும் இவருக்கே உண்டு. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ என்ற பாடலை அவர் வெறும் இருபதே நிமிடங்களில் ஒலிப்பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் பிரித்துப் பார்க்க முடியாத இரட்டைக்குழல் துப்பாக்கியாக ஒன்றுபட்டு செயல்பட்டதால் காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்கள் உருவாகின. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்த சாதனைக்கு சொந்தக்காரரான ’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வாநாதன் நேற்று  (14-7-2015) அதிகாலை 4.15 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார். தற்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும், இனிவரும் கலைஞர்களுக்கும் முன்னோடியாக உழைப்பால் உயர்ந்து, உழைப்பாளிகளின் களைப்பை போக்கி, ஆறுதலையும் மன நிம்மதியையும் அளித்து வாழ்ந்த எம்.எஸ்.வி.யின் பிரிவு, தமிழ் திரையுலகுக்கு ஒரு மிகப்பெரிய பேரிழப்புதான். மண்ணை விட்டு அவர் பிரிந்தாலும், அவரது இசையில் அமைந்த பல்லாயிரம் பாடல்கள் நமது நெஞ்சை விட்டு பிரியாமல், காலத்தால் என்றுமே அழிக்க முடியாத அமரக்காவியமாக காற்றலைகளில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து