முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முயற்சியால் தமிழ்நாட்டில் தொழில் துவக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள்: அமைச்சர் ப. மோகன் பெருமிதம்

புதன்கிழமை, 22 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, புதுடெல்லியில் நடைபெற்ற 46–வது இந்திய தொழிலாளர் மாநாட்டில்  முதல்வர் ஜெயலலிதா முயற்சியால்  தொழிற்சாலைகள் சட்டம், இதர சட்டங்கள் அமல்படுத்துவதில் பாதுகாப்பான, வலுவான தொழில் சூழ்நிலை எதிரொலியாக தமிழ்நாட்டில் தொழில் துவங்க பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வந்தவண்ணம் உள்ளன என்று தொழிலாளர் நலத்துறை  ப. மோகன் பெருமிதத்தோடு கூறினார்.

அமைச்சர் ப. மோகன் பேசியதாவது:–

தமிழகம் அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியினை விரைவில் எட்டக்கூடிய வகையில் சீரிய திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.  அத்தகைய ஒரு திட்டமாக  தொலைநோக்கு பார்வை -2023 என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பாரதத்தின் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.  மாநில பொருளாதார வளர்ச்சியில்  உற்பத்தி துறையின் பங்கீட்டினை அதிகரித்தல்,  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை துடிப்புடன் முன்னேற்றுவது, தொழிலாளர் திறன் மேம்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்துதல் போன்ற சீரிய திறன் வாய்ந்த திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் பரஸ்பர ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நன்மதிப்பின் மூலமே முன்னேற இயலும். உரிய நேரத்தில் சமரச அலுவலர்களின் தலையீட்டின் மூலம் மாநிலத்தின் தொழில் அமைதி கடைபிடிக்கப்படுகிறது. வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பு ஆகியவை தமிழ்நாட்டில் தற்போது  இல்லையென்றே கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.   பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை எட்டுவதற்கு தொழில் அமைதி அவசியமானது ஆகும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகிய பல்வேறு துறைகளுடன் இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஆய்வுக் குழுக்கள் தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடைமுறைகளில் பணி செய்ய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரிய…
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரிய தொடர்ச்ச்யாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் இதர சட்டங்களை நடைமுறைக்கு ஏற்றவாறு அமல்படுத்துவதில் பாதுகாப்பான மற்றும் வலுவான தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதால், பல்வேறு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் துவக்கி வருகின்றனர்.


தமிழக அரசின் முற்போக்கு கொள்கைகளாலும், தொழிற்துறை வளர்ச்சிக்கான சாதகமான சூழ்நிலையினாலும், தொடர்ந்து முதலீட்டாளர்களால் உற்பத்தித் துறையில் தொழில் அமைக்க விரும்பத்தக்க மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு தானியங்கி வாகனத்துறையிலும், சேவைத்துறையிலும், முன்னிலை வகிக்கும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதிக முதலீடுகளால் மிக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தற்போதுள்ள 62 தொழில் பயிற்சி மையங்களுடன் கூடுதலாக 15 புதிய தொழில் பயிற்சி மையங்கள் துவங்கியுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இதுவரை 21 துறைகளில் 3.21 லட்சம் நபர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது. நடப்பாண்டில் இப்பணிக்கென தமிழ்நாடு அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

72 ஆயிரம் பேருக்கு அரசு துறையில் வேலை
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 71,531 நபர்கள் அரசு துறைகளில் பணி பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 83,384 வேலையில்லாதோர் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வளாக தேர்வு மூலம் 51,780 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் வழியாக 8,460 நபர்கள் அயல்நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இளைஞர்களுக்குப் புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி, மறுதிறன் பயிற்சி மற்றும் பன்முகத்திறன் பயிற்சி போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த மனித வளம் மேம்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் திறன் மிக்க இளைய சமுதாயம் உலகச் சந்தையில் சவாலான  பணிகளை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழிப்பதில்  சீரிய கவனம் செலுத்தி வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் பெருமளவு குறைந்து குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் மாவட்டங்கள் குழந்தை தொழிலாளர்கள் அற்றவைகளாக அறிவிக்கப்படும் நிலையினை அடைந்து வருகின்றன. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 15 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 259 சிறப்புப் பள்ளிகளில் 10,832 குழந்தைகள் பயின்று வருகின்றனர். 2010–-2011 முதல் 2014–-2015 வரை 14,795 குழுந்தைகள் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்திட்டங்களில் முன்னோடி மாநிலம்
தமிழ்நாடு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதில் முன்னோடி மாநிலமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (நிலைப்படுத்துதல் மற்றும் தொழில் நிலைகள்) சட்டம் 1982 இயற்றியுள்ளது. தமிழக அரசு 69 தொழில் இனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிட இதுவரை 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை உருவாக்கியுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கல்வி உதவி,  திருமண உதவி, மகப்பேறு உதவி, குடும்ப ஒய்வூதியம், கண் கண்ணாடி உதவி, இயற்கை மரண உதவி, விபத்து ஊனம் மற்றும் விபத்து மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவி ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்பு சாரா நல வாரியங்களில் 63.82 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 32.96 லட்சம் பயனாளிகளுக்கு 837 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.  அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் மூலம் நேரடியாக செலுத்தப்படுகிறது. உறுப்பினர் பதிவினை புதுப்பிப்பதற்கான கால வரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.  தற்போது பணியிடத்தில் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது, விபத்து ஏற்பட்டு இறக்க நேர்ந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த விபத்து நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டு தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடத்திலேயே நடமாடும் சுகாதார சேவை மற்றும் மருத்துவ பரிசோதனைகள்  செய்தல்,  அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் மையங்களில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பல்மொழியில் கல்வி பெற ஏதுவாக உரிய போக்குவரத்து வாகன வசதிகளை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழிலாளர்களின் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி வசதியை அளித்தல் மற்றும் பணியிடங்களின் அருகில் தற்காலிக தங்கும் இட வசதிகள் செய்திடும் வகையில் தூங்கும் அறைகள் கட்டுதல் ஆகிய திட்டங்களை புதிய முயற்சியாக செயல்படுத்தி தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கனிணி மூலம் ஆண்டறிக்கை தாக்கல்தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கிட அவர்களின் பதிவேடுகள் மற்றும் ஆண்டறிக்கைகளை கனிணி மூலம் சமர்ப்பிக்க ஏதுவான தொழில் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் வணிகம் சுமூகமாக மேற்கொள்வதற்கு வசதியாக ஆய்வு திட்டம் comprehensive inspection scheme ஒன்றினை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மற்றும் தரம் வாய்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.

தொழில் வளர்ச்சியும், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனையும் சமமாக பாதுகாத்திட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அவசியமானது. தொழிலாளர் மற்றும் நிறு வனங்களிடையே ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும், தொழில் உற்பத்தி பெருகவும், தொழிலாளர்களுக்குப் போதிய நலத் திட்டங்களுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இத்தகைய அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் உபயோகமானதாக இருக்குமென கருதுகிறேன்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிகுந்த மாநாட்டில் பங்கேற்றிட வாய்ப்பளித்தமைக்கு,   முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து