முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புதிய மருத்துவக்  காப்பீட்டுத் திட்டத்தினை கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரிவுப்படுத்தும் அடையாளமாக மூன்று கூட்டுறவு  பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டிற்கான அடையாள அட்டையினை வழங்கி  முதல்வர் ஜெயலலிதா திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும்,தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும்  ஊரக வளர்ச்சி வங்கிகளில் தவணை தவறிய பண்ணைசாராக் கடன்தாரர்கள் பயன்பெறும்  வகையில் ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தினை துவக்கி வைத்து இரண்டு  பயனானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

‘தனி மனிதனுக்காக சமூகமும், சமூகத்திற்காக தனி மனிதனும்’ என்ற கூட்டுறவுக்  கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கூட்டுறவு இயக்கங்களை  வலுப்படுத்துவதிலும் முன்னேற்றமடையச் செய்வதிலும் தொலைநோக்கு பார்வையுடன்  ஆக்கபூர்வமான பல திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான  அரசு செயல்படுத்தி வருகிறது.  பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றும் தொடக்க  வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகள்  மற்றும் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கங்கள் ஆகியவை கூட்டுறவு சங்கங்களின்  பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களில் பணியாற்றும்  பணியாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தினை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின்
கோரிக்கையினை பரிவுடன் ஏற்று, அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு  வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும்  பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர்  ஜெயலலிதா .2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ம்தேதி சட்டப்பேரவையில்  அறிவித்தார்.

அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு  பணியமர்த்தம் செய்யப்பட்ட 6245 கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பொது விநியோகத்  திட்ட விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட 41,061 சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது  குடும்ப உறுப்பினர்கள் சுமார் 1,14,986 நபர்கள், என மொத்தம் 1,56,047 நபர்கள்  பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் கூட்டுறவு பணியாளர்களுக்கான மருத்துவக்  காப்பீடு விரிவாக்க திட்டத்தினை துவக்கி வைப்பதன் அடையாளமாக மூன்று கூட்டுறவு  பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளை முதலமைச்சர் ஜெயலலிதா  வழங்கினார்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட சங்கப்  பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தமிழ்நாடு அரசு  ஊழியர்களுக்கு இணையாக மருத்துவ காப்பீடு வசதியினை பெற்றுக் கொள்ளும்  வகையில் இத்திட்டத்திற்கான ஆண்டு தவணைக் கட்டணம் 2,120 ரூபாய் கூட்டுறவுச்  சங்கப் பணியாளர்களாலும், அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சங்கத்தாலும் சரிபாதியாக  பகிர்ந்து கொள்ளப்படும்.

மேலும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில்,  பண்ணைசாராக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காக கடனுதவி பெற்று,  நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள கடன்தாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து  பண்ணைசாராக் கடன்களுக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டித் தொகையைத்  தள்ளுபடி செய்யும் வகையில் """"ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தினை‛ செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கிகளில் பல்வேறு நோக்கங்களுக்காக பண்ணைசாராக் கடன் திட்டத்தின் கீழ்  கடனுதவி பெற்ற 5,741 பயனாளிகள் நீண்டகாலமாக கடனைத் திருப்பிச் செலுத்த  இயலாததால் அசல், வட்டி மற்றும் கூடுதல் வட்டி ஆகியவற்றைச் சேர்த்து 299 கோடியே 80 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. எனவே, இவர்கள் பெற்ற கடனைத் தீர்வு செய்ய  ஏதுவாகவும், கடன்தாரர்கள் பெற்ற அசல் தொகைக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி பெற்று பயனடையும் வகையிலும் ‚ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தினை‛ துவக்கி வைப்பதன் அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு பயனாளிகளுக்கு ஒரு முறை கடன் தீர்வு திட்ட சான்றிதழ்களை வழங்கி துவக்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 31.3.2014 அன்று உள்ளபடி, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்கள் அனைத்திற்கும் நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டியினை முழுமையாகச் செலுத்தி தீர்வு காணலாம்.
அவ்வாறு தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கடன்தாரர்களுடைய கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் வசூல் தொடர்பான இதர செலவினங்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மேலும், கடன்தாரர்கள் செலுத்தவேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகையில் 25 சதவிகித தொகையை 3 மாத காலத்திற்குள் செலுத்தி, வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மீதமுள்ள 75 சதவிகித தொகையை 6 மாத காலத்திற்குள் செலுத்தியும் கடனைத் தீர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், பண்ணைசாராக் கடன்களை நீண்ட காலமாக திருப்பிச் செலுத்த இயலாத 5,741 பயனாளிகளுக்கு 166 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்டவாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து