முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வானிலையை அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலையும் சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. சாலைகளில் வாகனங்கள் நீரில் தத்தளித்தப்படி சென்றன. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மரக்கிளைகள் ஒடிந்தும் விழுந்தன. வில்லிவாக்கத்தில் மட்டும் 14 இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

பெரம்பூர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 3 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. போலீஸ் நிலைய வளாகத்தில் விழுந்த மரத்தால் போலீசார் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அங்கிருந்த சில மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. கனமழை காரணமாக பெரம்பூர் பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இன்றும் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்” என்றார்.

இதனிடையே வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (தூரத்து புயல்) ஏற்றப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து