முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் நாளை இறுதிச்சடங்கு ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாமின் உடல் அடக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை  (30-ம் தேதி) காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  காலை ஷில்லாங்கில் இருந்து கவுகாத்தி நகருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நண்பகல் சுமார் 12.30 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்துக்கு அவரது உடல் வந்துசேர்ந்தது.

சுமார் 12.45 மணியளவில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், முப்படைகளின் தளபதிகள், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முப்படை தளபதிகளின் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கிருந்து துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அப்துல் கலாமின் உடல் புதுடெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 10- ராஜாஜி மார்க் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பல்துறை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் டுவிட்டர் வழியாக அவருக்கு புகழஞ்சலி சூட்டி வருகின்றர். இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் நாளை பிற்பகல் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் ராமேஸ்வரத்தில் அவரது பூர்வீக இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர், நாளை  (30-ம் தேதி) காலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என மத்திய உள்துறை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் முக்கிய மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கவுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து