முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த கலாமுக்கு சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் புகழஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல வீரர்கள் புகழாஞ்சலி செலுத்தினர். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், மகா மனிதனின் இழப்புக்காக தேசமே வருந்துகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர், மிகப்பெரிய விஞ்ஞானி ஆகிய அவர் அனைவருக்கும் தூண்டுதலாக வாழ்ந்தவர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, நான் கலாமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பதிவேற்றியுள்ளேன். 2003 உலகக் கோப்பை போட்டிகள் முடிந்து நாங்கள் அவரைச் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். அவருடன் உரையாடியுள்ள கவுரவத்தை சில தருணங்களில் பெற்றுள்ளேன். நான் அவரிடமிருந்து பத்மஸ்ரீ (2004) விருது பெற்றேன். அவரைச் சந்தித்த அந்தத் தருணத்தில் அவர் மிகவும் எளிமையானவர் என்பதை உணர்ந்தேன்.

பெரிய அளவில் படித்தவர், வெகுஜன மக்களுக்கான மனிதர் அவர். நாட்டுக்காக அவர் சேவையாற்றிய விதமும், இளம் தலைமுறையினரின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், மாணவர்களுக்கு அவர் தூண்டுகோலாக இருந்த விதமும், அவரை எப்போதும் அனைவரும் நினைவில் வைத்திருக்கச் செய்யும்.

அவர் இந்திய அணிக்கு தனது ஆசிகளை தெரிவித்தார், அனில் கும்ளே அவரிடம் உரையாற்றியதும் நினைவிருக்கிறது, அவருக்கு கிரிக்கெட் ஆட்டம் பற்றி விளக்கியது நினைவிருக்கிறது. 11 பேரைக் கொண்ட கிரிக்கெட் ஆட்டம் எப்படி ஆடப்படுகிறது என்று நாங்கள் கூறியது நினைவிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும் போதும் அவரது உலகமும் அவரது சிந்தனையும் வித்தியாசமானது என்பதை உணர முடிந்தது. அவர் நாட்டின் ஜனாதிபதியானார், ஆனால் அவரது சிந்தனை முறை மற்றவர்களை விடவும் வித்தியாசமானது என்றார்.

அதேபோல் தடகள வீரர் மில்கா சிங், மற்றும் முன்னால் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர் ஆகியோரும் கலாமுக்கு புகழாஞ்சலி செலுத்தினர், மில்கா சிங் கூறும் போது, தானாகவே உருவாகி வளர்ந்தவர் அவர். மிகவும் எளிமையான சூழலிலிருந்து நாட்டின் உயரிய பதவியை வகித்தவர். இளம் மனங்களை ஜொலிக்கச் செய்தவர், கோடிக்கணக்கான மக்களின் இதய நாயகனாவார் கலாம். அவர் உண்மையில் மக்கள் ஜனாதிபதியாவார், ஒரு அரிய வைரம் அவர்” என்றார்.

91 வயதான முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் கூறும்போது, உண்மையில் பாரத ரத்தினம் அவர். தொலைநோக்குப் பார்வை உடையவர். உங்களை இரவில் உறங்க விடாமல் செய்யும் கனவுகளே முக்கியமான கனவுகள் என்று அவர் கூறியது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து