முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணீர் கடலில் ராமேஸ்வரம்: கலாமுக்கு பொது மக்கள் அஞ்சலி

புதன்கிழமை, 29 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு தமிழக கவர்கனர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா சார்பில் செல்லூர் ராஜூ, மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் அவரது உடல் ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு மண்டபம் கேம்ப் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.

அதைதொடர்ந்து கலாமின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க மறைந்த தலைவருக்கு மரியாதை செய்தனர். ராமேஸ்வரமே கண்ணீர் கடலில் முழ்கியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் தீவு நகரமே திணறி வருகிறது. முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருவதால் உச்சக்ட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடநத (ஜூலை 27) கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றி கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்ததை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள கலாமின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல்கலாமின் உடல் டெல்லியிலிருந்து நேற்று காலை 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் அவரது உடல் ஏற்றப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த தனி விமானம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து கலாமின் உடல் இறக்கப்பட்டு ராணுவ வண்டியில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோஜ் பாரிக்கர், மேகாலயா முதல்வர் சண்முகநாதன்,தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், முதல்வர் ஜெயலலிதா சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி,போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், மாநகராட்சி கமிஷனர் கதிரவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அப்துல்கலாமின் உடல் அலங்கரிப்பட்ட ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு பிற்பகல் 1.40 மணியளவில் புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டர் ராமநாதபுரம் அருகே உள்ள மண்டபம் கேம்பில் உள்ள மைதானத்திற்கு வந்து இறங்கியது. அங்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தர்ராஜ், உதயகுமார், ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் மற்றும் அரசு அதிகாரிகள் அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பிறகு அங்கிருந்து சாலை மார்க்கத்தில் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழக்காடு மைதானத்திற்கு மதியம் 2.45 மணியளவில் கொண்டுவரப்பட்டது. அந்த மைதானத்தில் பெரிய அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் தேசிய கொடி போர்த்தப்பட்ட அப்துல்கலாமின் உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று மலர் மாலைகள், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் வரிசையாக செல்வதற்கு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் வந்ததினால் ராமேஸ்வரம் நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. ராமேஸ்வரம் நகரமே மயான அமைதியாக காணப்படுகிறது. மக்கள் முகத்தில் சோகமாக காட்சி அளிக்கிறார்கள். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அப்துல்கலாமின் உடல் இன்று இரவு 8 மணிக்கு மேல் அவரது அண்ணன் முத்துமுகமது மீரான் லெப்பை மரைக்காயர் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கும் ஏராளமான மக்கள் அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இரவு முழுவதும் லெப்பை மரைக்காயர் வீட்டில் அப்துல்கலாமின் உடல் வைக்கப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 8 மணியளவில் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளி வாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது. இதையத்து 9 மணிக்கு மேல் அப்துல் கலாமின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் வைக்கப்பட்டு 7 கி.மீ.தூரம் உள்ள பேக்கரும்பு என்ற இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இடம் தங்கச்சிமடம் பஞ்சாயத்துக்கு சொந்தமானது. 1.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

நாளை நடைபெறும் அப்துலம் கலாமின் இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தர்ராஜ், உதயகுமார், ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், அன்வர் ராஜா எம்பி, முருகன் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் இடத்தை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து அப்துல்கலாமின் உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் அப்துல்கலாமின் உடல் இன்று பிற்பகலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் வந்ததால் ராமேஸ்வரம் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. மக்கள் முகத்தில் ஒரே சோகமயமாக காட்சி அளிக்கிறது. ராமேஸ்வரம் கண்ணீர் கடலில் முழ்கியுள்ளது.
கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அங்கு நினைவிடம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருப்பது போல் இங்கு அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அப்துல் கலாம் இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதால் புல்வெளிகள், மரங்களுடன் கூடிய இயற்கை எழிலுடன் நினைவிடம் கட்டப்படுகிறது.

ஏவுகணை நாயகனான அப்துல்கலாமின் மறைவு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர நாயகனின் உடல் நல்லடக்கம் நாளை ராமேசுவரத்தில் நடக்கிறது. அவரது மறைவையொட்டி, ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

அவர்கள் அங்குள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் பொதுமக்கள் அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்துவதை காண முடிந்தது. ராமேசுவரத்தில் உள்ள கலாம் படித்த பள்ளி மாணவர்களும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி அஞ்சலி செலுத்தினர். ராமேசுவரத்தில் அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள், கூலித் தொழி லாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஜாதி, மத பேதமில்லாமல் தங்கள் மண்ணின் மைந்தன் என்ற பெருமையை நினைத்து அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள கலாம் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராமேஸ்வரம் புறப்பட்டார். நாளை (ஜூலை 30ம் தேதி) கலாம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் இதில் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் உம்மன்சாண்டி புறப்பட்டார். அவருடன் சபாநாயகர் சத்தன், எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மற்றும் சில அமைச்சர்களும் செல்கிறார்கள்.

தனி விமானம் மூலம் மதுரை செல்லும் இவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து தனி விமானம் மூலம் கேரளா திரும்புகிறார்கள். அப்துல்கலாம் கேரளாவில் பல ஆண்டுகள் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் என்பதால் அவரது உடலுக்கு கேரள மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அப்துல்கலாமின் உடலை திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உம்மன்சாண்டி பிரதமருக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடதக்கது. கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்றும் நாளையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக கம்பு தடுப்புகள் போடப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்று அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், உதயகுமார், சுந்தர்ராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்கள் வந்து செல்லும் வழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியையும் அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து