முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் அப்துல் கலாமின் மறைவை நினைந்து சீனக் கவியரசர் யூஷி வரைந்த கண்ணீர் கவிதையஞ்சலி

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

வசந்தம் வரும் ; வான்மழை  பொழியும் 

பயிரும் புல்லும் செழிக்கும்

புதிய அதிசியங்கள் பூக்கும்

பார்புகழும் பாரதத்தின் பளிங்குத் திலகம் நீ !

நீயே !  களி குலுங்கும் ஒரு கவிதை

நாட்டு மக்களின் நல்லிதயங்களை வருடி

நாடித் துடிப்புக்களை தடவும் நரம்பு யாழாக

விண்ணும் மண்ணும் விளைந்து நின்று

உன் வெற்றிப் புகழை எப்போதும் இசைக்கும்.

 

அச்சத்தை அகற்றிவிட்டு

அளப்பறிய ஆற்றலை வளர்க்க வேண்டுமென்று

எப்போதும் நீ அறைகூவல் தந்தபடி இருந்தாய் ;

மக்கள் மனதில் மாறாத மகிழ்ச்சி எக்களிக்க வேண்டுமென்று

எப்போதும் ஏற்றப் பணி  செய்தவன் நீ !

 

கவிச் செல்வம் மட்டுமா ?  உன்னுடைய செவிச் செல்வத்தையும் சேர்த்துப் பார்த்தால்

சிந்தைக்கு எட்டாத ஞானச் செல்வம் உடையவன் நீ !

உலகயமைதியும் 

உயர் ஞான அருட்குரலும்

உன்னோடு இணைந்தவை

தலையாய ஞானத்தின்

நிலையான திறமையைத்

திரட்டிய அறிவுப் பிழம்பு நீ !

 

என் நினைவில் வருகிறது

புதுதில்லியில் நீ புவியரசனாக இருந்த போது

எழில் கொஞ்சும் மொகல் சோலையில் இருந்தபடி

என்னிடம் எத்தனை எண்ணங்களை

பாகெனத் தேனெனப்

பகிர்ந்து தந்தாய்

இந்த நிகழ்ச்சி நடந்தது

2007ஆம் ஆண்டைய 28 மார்ச்சு அல்லவா ?

தேவ ஒளி வீசுகிற

தெய்வீகத் திருமகனை

ஆசிரியப் பொன்மகனை

அருள் பொழியும் கண்ணோடு 

நெருங்கி தரிசித்த என் நினைவை

நீக்க முடியாது

 

அக்கினி சிறகுகள் அசைந்தபடி

உன் அமுத வாய் மலர்ந்தால் 

வாசப்பூக்கள் நூறு மலர்ந்தன.

 

அதே ஆண்டில் அனைத்துலகக் கவிஞர்களின்

அவைக்களம் உன்னால் அழியா புகழ் பெற்றது

மாநாடு மட்டுமா ? 

எல்லையில்லா புகழை

சென்னை மாநகரம் ஏந்தி நின்றது

வானம் தங்கத் தகதகாயமாக மிளிர்ந்தது.

 

நீலக்குயில் தன்னந்தனியாக

நெஞ்சை உருக இசைத்த போது

கொஞ்சும் குரலால்

நீ நெருங்கி வந்து

ஒரு பூந்தோட்டமே குலுங்குகிறது என்று

பொன்மொழி உதிர்த்தாய்

உன் நன்மொழிக்கு

நான் எப்படி நன்றி சொல்வேன்.

 

இன்னொரு முறை எண்ணிப் பார்க்கிறேன்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு

உன் அழகிய இல்லத்தில் வரவேற்று

நீ வாசிக்கும் அறையை

சுற்றிக் காட்டினாய் ;

சுகந்தம் வீசியது

அவ்வண்ணமே,

பிரம்மோஸ் விண்ணூர்தி  திணைக் களத்தை

கண்ணாரக் காட்டி மகிழ்ந்தாய்

அதே இரவு

உன் தோளோடு தோள் இணைய

சென்னை மாநகரத்திற்கு பறந்து வந்தோம்

என் நெஞ்சம் உருகுகிறது, 

கண்ணீர்த் துளி அன்றைய

கார்மேகத்தின் துளிகளாய் விழுகின்றன.

 

அண்ணாப் பல்கலைக்கழகம்

உன்னை வளர்த்த அன்னைப் பல்கலைக்கழகம்

சென்னையின் சிகரமது ! 

உன் பேராசிரியத் தோழர்களோடு

என்னை பாராட்ட வைத்தாய்.

இடியில்லாத மழை பொழிந்தது அந்த இரவு

இதோ ! என் கண்ணிலும் அதே மழை தான்.

 

உங்கள் கல்விக்கூடம்

என் நெஞ்சில்

பெருமதிப்பு கொள்ளச் செய்தது.

அற்றைய மாபெரும்

எழுச்சிமிக்க வரவேற்பு

காலத்தாற் சென்னையில்

மழைபொழிய வைத்தது.

ஒரு நினைவு,

ஒவ்வொரு மழைத்துளியும்,

2007 ஆம் ஆண்டைய

சித்திரைத் திங்களின் தொடக்கத்தை

அந்தப் பிற்பகல் முழுதும்

நடமாடி நின்றது.

குடியரசுத்தலைவர் மாளிகையின்

மொகல் தோட்டத்தில்

பூத்துக்குலுங்கும்

எண்ணற்ற மணமிக்க

மலர்களுக்கிடையே,

“பெருங்கடல் கூடல் ” என்ற அருமையான தலைப்பில்

உலக அமைதியையும்

புனிதத்தையும்

போற்றிப் பாடும் வகையில்

அமைந்த பாடல் தொகுப்பைத்

தங்கள் திருக்கரங்களால் பரிசளித்ததை

என்னால் மறக்க இயலுமோ?

 

 

புவி எங்ஙணும் வாழும்

மாந்தர் யாவரும்

அமைதியையும் வளமையையும்

விரும்பும் இயல்பினர் ஆவர் என்ற

தங்கள் பொன்மொழியை  மறந்திடப்போமோ!

 

 

சிந்தயால் ஒன்றுபட்ட

கவிபாடும் உள்ளங்கள்

செம்மார்ந்த கவித்திறத்தால்

புவியின் மேன்மையைத்தான்

எப்பொழுதும் உயர்த்திடக் கருதுவரோ!

அவ்வகையில் எழுந்ததன்றோ

தங்கள் சீரிய எண்ணமும் செம்மாந்த எழுத்தும்.

 

 

இன்று ஒரு மிதமான காற்று

அமைதிக் கடலாம்

‘பசுபிக்’ கடலிலிருந்து

மெல்ல எழுகிறது.

கடலலையும்,

தனிநிலையும்

தெளிவையும்,

மென்மையையும்

வெளிக்காட்டி நிற்கின்றன.

 

 

நீலவண்ண வானம்

எங்கும் பரந்து கிடக்கிறது.

மலைச்சரிவுகள்,

மலைமுகடுகள் இவையாவும்

கரும்பச்சை வண்ணத்தில்,

காட்சிக்கினிய நிலையில்

தென்படும்போது,

‘பைகுவா’ நீரோடை

தங்கள் உள்ளத்தூய்மையையும்,

தொடுவானம் போல்

விரிந்து கிடக்கும்

பெருந்தன்மையும்

பாடிக்களிக்கிறது.

 

 

உறக்க நிலையிலிருக்கும்,

பண்டைய ஒற்றைப்பாளக்கல்லும்

உறக்கங்கலைந்து,

தங்கள் இழப்பை உணர்ந்து

காற்றிலிருந்து ஒலியைக்

கடன்வாங்கிக் கதறுகிறதே!

 

 

அந்தோ!

கனவுகள்  நிறைந்த தலைவ

எங்கே என்று தேடுகிறதே!

 

 

காலமும் வெளியும்

தந்த மோன மொழியில்

இந்தியத் திருநாட்டை

அது பாடிக் காட்டுகிறதோ!

 

 

இதோ,

கதிரவன் வானில் மறைகின்ற

நேரம் நெருங்குகிறது.

மாலைக்கதிரோனின்

கதிரொளியில்

மீன்பிடிப் படகுகள்,

சிவந்து மின்னுகின்றன.

இரவின் மங்கிய ஒளியில்

பனித்துளி ஆழ்நிலை தியானத்தை

ஆடையாய் தரிக்கிறது.

எட்டாத உயரத்தில்

பிறைநிலவின் தோற்றம்

வானை அழகுப்படுத்துகிறது.

 

 

தனிமையில்,

நான் தியானத்தில்,

என் சிந்தனையை

ஒருமுகைப்படுத்தி

சம நிலைக்கு என்னை ஆட்படுத்துகிறேன்.

 

தேடுகிறேன்... தேடுகிறேன்

ஒரு நினைவுக்கீற்றை.

தென்படுகிறது

மானுடத்தின் பேரன்பையும்,

பெருங்கனியையும்

விதைக்கின்ற விதைகளாய்

தங்கள் திருவுருவம் ஒன்றே

என் அகக் கண்ணில்.

மக்களின் மகோன்னதத் தலைவராக விளங்கிய

அப்துல் கலாம் அல்லவா நீங்கள் !

 

 

இந்திய நாட்டு ஒவ்வொரு குழந்தைகளின் மீதும்,

எழில்மிக்க இளைஞர்கள் மீதும்

அன்புமழை பொழிந்தோர்

தங்களைப்போல் யாருளர்?

வியக்கின்றேன் எந்நாளும்.

 

 

எதிர்பாரா நம் சந்திப்பொன்றில்,

அலைகடலின் ஓரத்தில்

அன்று நீங்கள் சொன்னது,

என்நெஞ்சத்தில்

நீங்கா இடம் பெற்றதன்றோ!

 

 

அழகும், அமைதியும்,

வளமும், செயல்திறனும்,

முழுமை மிக்கதாய்,

இந்தியத் திருநாடு

2020 ஆம் ஆண்டில்  வல்லரசாக

மாறப்போகிறது

என்று நீங்கள் உரைத்தது

உங்கள் தொலைநோக்கின் வெளிப்பாடு.

அவ்வழியே அமையும்

இந்திய நாட்டின் செயற்பாடு.

 

நீங்கள் ஒளியேற்றி வைத்து விட்டீர்கள்!

வழியெங்கும் ஒளிவெள்ளம்!

ஒளிரத்தான்போகிறது

இந்தியா என்பது திண்ணம்!

 

 

உங்களது அழகிய எதிர்ப்பார்ப்புகள்

இந்திய திருநாட்டின்

கலங்கரை விளக்கங்கள்

 

ஒளிவிளக்கை

கையில் ஏந்தச் செய்து

கடும் காற்றிற்கெதிராய்

நெடும்பயணம் செய்து,

அழகிய காலத்தை

இத்திருநாட்டிற்கு

அடையாளம் காட்டியவன் நீ !

 

கடைக்கோடி கடல் திட்டில்

வெண்கமலமாய் சிரித்தெழுந்து

மீள கடற்கரையில் நித்திரை கொள்ள துடித்தாய் நீ !

 

பிறந்தது  முதல்

உயிரினங்களின் மீது

எண்ணிலடங்கா

அன்பை சுரந்த  அதிசயம் நீ!

 

சிறு மீன்பிடி துறைமுகத்தின்

விண்ணுலகப் பயணி நீ !

சொர்க்கத்தின் படிக்கட்டில் ஏறி

சொகுசாய்  உச்சியிலமர்ந்துவன் நீ!

உன் பேரறிவு எட்டாத

பெருநிலமேதும் உண்டோ!

தியானத்தில் ஆழ்ந்து விட்டவன் நீ !

உன் மறுபிறப்பிற்கு தவித்தேங்கும்

உலகத்தின் துடிப்பை  அறிவாயோ நீ !

 

தலை நகர்  தில்லியின் பாதாம் மரம்,

உன் ஓய்வு நித்திரையின் அமைவிடமா?

விண்மீன்களிலிருந்து இறங்கி வந்த

கனாநிலைப் பயணியே,

கருநீல வடதிசை

விண்மீனையும் பாருமய்யா!

இரவு விண்மீன்

வழியின் கதவு திறந்து,

எல்லையில்லா வானில்

உலா வருவாயோ!

இரவில் விண்மீனாய் நீ மட்டும்,

பிரகாசமாய் மின்னுகிறாய்!

வானத்தை இருபுறமும்

தாங்கிப் பிடித்த,

அழிவில்லா உந்தன்

அன்புக் கவிதையை,

எப்போதும் மக்களுக்கு எடுத்துரைப்போம்.

 

கனாநிலை பயணியின் கால்தடங்களை,

நீலக்கோள் முழுதும் காண்கின்றோம்.

முடிவில்லா கடிதம்போல்,

உண்மைகளை உருவாக்கி

கனிவுகூர் அறிவுஜீவியின்

கால்தடத்தில் தந்திடுவோம்.

புவியளவு கனிவான இதயம் கொண்டு

சிறு குழந்தை போல்

தூய்மையான மனம் கொண்டு

கனிவுடன் அறிவளிக்கும்

உலகின் மாமணியே!

அழகிய பாரதத்தின்

உந்துசக்தி நீயே !

பாரதத்தின் குழந்தைகளுக்கும்

இளைஞர்களுக்கும் முன்மாதிரி நீயே!

கோடைக்கால இரவின் மடியில்,

வந்து விழும் பல்லாயிர இடிகள்

மலையடிவார மடாலயம் வரை ழுழங்குகிறதே !

 

 

14 ஜூலை 2015 அன்று

கூதிர் பருவ பிறப்பு விழாவிற்கு வருகை தர

இரு வாரங்களுக்கு முன்பு

எளியேனின் அழைப்பை ஏற்றாய்.

இன்று, எதிர்பாரா செய்தி

என்னை அடைந்தது

சுற்றுகின்ற பூமி நின்றது போல்,

எல்லையில்லா வானம்

வெண்மையானது.

எல்லையில்லா விண்வெளியில்

மின்னுகின்ற விண்மீன்களுக்கிடையில்,

“டிராகன்” மீதேறி அமர்ந்து,

தாய்வானுக்கு தாவி வரமாட்டாயோ!

 

வெண்கலக் குரல் வள வேந்தனாய்

உனைக்கண்டேன்.

பெருங்கடலைக் காணும் போதெல்லாம்

தோன்றுகிறது மற்றொரு கனவு,

ஓ ! சித்தரே !

உங்கள் இசை நாதம்

எப்பொழுது அடங்கிப் போயிற்று!

உங்களின் இதயத்தின் மீதிருந்த

பனித்துளி மண்ணில்

எப்படி உதிர்ந்தது!

வசந்தகாலத்தின் நிலவொளி இரவில்,

தவளைகள் கத்தும்  ஓலங்கள்,

மரங்களின் முணுமுணுப்பு,

புல்லினத்தின் மெல்லிசை

மழை வருமென நம்பிக்கை,

வானவில்லின்  வண்ணமிகு ஓவியம்,

பாலம் கடந்து ஓடும் நீரில் –

அதனை பின்தொடரும் நிலவொளியில்

மறையும் சூரியனைக் காண்கிறேன்,

முழுமையான அமைதி,

உங்கள் சன்னலின் புகைப்படம்,

மற்றுமொரு பெருங்கடலின் கனவு!

இந்தப் பெருங்கடலை

பால்வழித்திரள் மட்டுமே

இணைத்தனவென்றால்,

அந்த நட்சத்திர இரவிலிருந்து

அது திரும்புமென நான் உறுதியாக நம்புகிறேன்.

என் கால்தடத்தில் சிறு அதிர்வு,

உன்னத ஈடுபாடு,

பற்றின்றியும், ஈடுபாடின்றியும்

எங்ஙனம் நீடித்திருப்பது,

மூச்சுக்குழலுக்கு மகரந்தம்

எப்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும்,

ஓ! அறிவார்ந்த

ஈகைகுணம் கொண்டவரே!

இயற்கையின் ஈரக் கசிவின்றி

பசுமையான தோட்டத்தில்

எவ்வாறு உலா வருவது ?

நகரத்திலும் நாட்டிலும்

பேரொலி நிறைந்த கூட்டத்திற்கிடையே

ஆழ்ந்த உண்மைகளை வெளிபடுத்துகின்ற

ஓ! கனிவான தூயவரே! 

அனைவரிடமும்

பெருங்கனிவோடு பழகிய

உங்களை இழந்து

நாங்கள் எவ்வாறு

அமைதியுடனும்

துயரமின்றியும் இருக்க இயலும் ...

பொங்கிப் பெருகும்

பேரலையாய் எழுந்தவரே,

கனிவான உங்களுடைய தூய உள்ளத்தில்

நீங்காது நிறைந்திருந்த

நான்கு பருவங்களையும் வளமாக்கிய

முப்பெரும் கடல்களே,

ஐம்பெரும் கண்டங்களே!

ஒரு சிறு புல்லின் நுனியில்

படர்ந்திருக்கும்

ஒற்றை பனித்துளியே,

பாரத நாட்டின்

அன்புள்ளம் கொண்ட மக்களுக்கு

ஒவ்வொரு நாளையும்

பொன்னாளகச் செய்து

அனைவரும் சார்ந்திருக்கின்ற

தன்னலமற்ற விண்ணிலும் மண்ணிலும்

நீங்கள் ஒரு வசந்தமான

தென்றலாக வலம் வந்தீர்கள்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு

மார்கழியின் மதி நிறைந்த நன்னாளில்

பசிபிக் கடலோரத்தில்

என் அன்பான அழைப்பினை ஏற்று

பாரத நாட்டிலிருந்து

நண்பர் டாக்டர் கலாம்

என்னை சந்தித்தார்.

 

கனா நிலையார்ந்த

பயணியின் நூல்கள்

மற்றும்

ஓவியங்களின்

எழிலார்ந்த தொகுப்பு

விழுந்த  தூரிகையில்

கனன்றெரியும் பீனிக்ஸ் பறவை போல்

காட்சியளிக்கின்றன.

முழுமதி நிலவில்

நீலப் பறவையைப் போன்று

ஒவ்வொரு பக்கமும்

நர்த்தனமாடுகின்றன.                                         

உலகில் எல்லையற்ற

அமைதியையும், வளத்தையும்

இந்த சகாப்தத்தின் எல்லையற்ற

ஆழ்ந்த உண்மைகளை

வெளிகொணர்ந்த

இந்த உலகிற்கு

 நிலையான அமைதியையும்

வளத்தையும் நல்குகின்ற

தாரக மந்திரத்தை உச்சரித்தவரே !

நீரே ! இப்பூவுலகின் கவிஞர்

நீரே ! இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பாதுகாவலர்

நீரே ! எனது போற்றுதலுக்குரிய வழிகாட்டி !!

துறவிமடத்தின் தொன்மைவாய்ந்த

ஒற்றைக்கல் சிற்பம்

மௌனம் காக்கிறது

ஏனெனில் நீங்கள்

அதனை பொருட்படுத்தவில்லை

நீங்கள் செவிமடுத்தீர்கள்

ஆனால் உன்னிப்பாக கேட்கவில்லை.

 

அலைகள் நிறம் மாறாமல்

ஆழமாகவும் தெளிவாகவும் உள்ளன

ஏனெனில் நான்

அதனை பொருட்படுத்தவில்லை

நான் கண்டேன்,

ஆனால் உற்று நோக்கவில்லை.

 

 

அலைமுகட்டில் நீங்கள் தியானத்தில்

அமர்ந்திருந்தப் போதிலும் கூட

வங்கக் கடலின்

வானுயர்ந்த சிகரமாய்

தாழ்ந்த உயர்ந்த முகடுகளாய் இருந்தவரே

வான்வெளியில் இடியோசை

ஏற்கனவே அற்றுப்போய்விட்டது.

ஆனாலும் ஓசையின் தாக்கம்  நின்றபாடில்லை.

மங்கல நாட்டிலுள்ள ஹிஜிங் திடலில்

உங்களின் புகழ் விண்ணைத் தாண்டி ஒலிக்கிறது.

அறிவுச்சுடரே! ஞான ஒளியே!

எண் திசையிலும்

உங்கள் வெங்கலக் குரல்

ஓங்கி ஒலிக்கிறது.

அதனை செவிமடுக்காதவர்

எவருளரோ ?

 

நேற்றிரவு திடீரென தாமரை மலரிதழ்கள்

 சட்டெனக் கூம்பின

விண்மீன்கள் மின்னுகின்ற தொடுவானத்தில்

தொலைவிலிருந்து நண்பர் ஒருவர்

பயணித்து வந்தார்

மழை சிகரங்களுக்கு பின்னால்

நிலவு ஒளிந்து கொண்டது

மாபெரும் கண்ணாடி போன்ற

மூடுபனி விரவிய திரைக்கடல்

மற்றொரு பெருங்கடலைப் பற்றி

கனாக் கண்டது.

இந்தப்  பால்வெளி, பெருங்கடலுடன்

ஒன்றுகலந்தால் மட்டுமே

விண்மீன்கள் நிறைந்த

இரவுப்பொழுதினில் நீங்கள்

நிச்சயம் மீண்டு வருவீர்கள்

என்பது திண்ணம்.

 

மிக மிக எளிமையாய்,

மிகப்பெருந்தன்மையாய்,

நிதானப்போக்குடையவராய்,

அச்சமற்றவராய்,

அழகிய இந்தியத் திருநாட்டில்,

மக்கள் அனைவர் உள்ளத்திலும்

நிரந்தரக் குடியாட்சித் தலைவராய்

கோலோச்சி வந்தவர்தானே தாங்கள்!

மிகவும் நேர்மையாளராய்,

போலித்தன்மையற்றவராய்,

உயர்கேண்மை கொண்டவராய்,

நல்லுணர்ச்சி மிக்கவராய்,

நாளும் நாளும் திகழ்ந்து வந்த

வியத்தகு மாமனிதரே!

தாங்களே ஒரு பெருங்கவிதை.

எண்ணிப்பார்க்க ஒண்ணா

ஏற்றமிகு பண்புகள்

உறைந்து இலங்கும்

உன்னதக் கவிதையே!.

எண்ணற்ற விண்மீன்களுக்கு இடையே

எழில் கொஞ்சும் தங்கள் தோட்டத்து மலர்கள்

பளீரென்று புன்னகைக்கின்றன.

(ஓ! அவற்றின் புன்னகையின் பின்னும்

அவலம் சிந்துகிறதே! )

ஆயிரம் தாமரைகள் மலரட்டுமே !

என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற

தங்கத் தாமரையே !

அறிவார்ந்த கவிஞரே !

மக்கள் இதயத்தில்

என்றும் நீங்கள்

இந்தியத் திருநாட்டின்

மக்கள்  தலைவராய்

முடிசூடியவரன்றோ தாங்கள்.

ஒருவர் அமர, இத்தனை சிம்மாசனங்களா?

அடடா!  அடடா!  என்னே அதிசயம்)

அழகிய பாரதத்தை

அற்புத இந்தியத்திருநாட்டை

சந்திர ‘வம்சத்தின்’ பண்டைய அரசாட்சியை,

பறைசாற்றும் ஒளிவிளக்காய்த் திகழும்

ஒப்பற்ற தiவைரைப் போற்றிப் பணிகிறேன்.

மண்ணையும் விண்ணையும்

ஊடுருவி காண்கின்ற

விழிகளை நோக்குங்கள்

கதிரொளியில் நீங்கள்

அனைத்தையும் காண்கிறீர்கள்

உணருகிறீர்கள்.

நீங்கள் விண்மீன்களுக்கிடையே

ஒளிர்கின்ற கவிஞர்

கவின்மிகு பாரத நாட்டின்

குழந்தைகளையும் இளைஞர்களையும்

வழிநடத்திச் செல்பவர் நீரே!

நீர் ஒருவரே !

நீருள்ளளவும், நிலனுள்ளளவும்,

காடுள்ளளவும், கவிதையுள்ளளவும்

மங்காது மறையாது உன் வான்புகழே !!!

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து