முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காதவர் கலாம்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம் - மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்றதில்லை. தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார்.  அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த அன்பளிப்பையும், ஓய்வு பெற்ற பிறகு தன்னுடன் எடுத்து வரவில்லை. சில குடியரசுத் தலைவர்கள், ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறும்போது, குடியரசுத் தலைவர் அமரும் அசோக சக்கரம் பொறித்த நாற்காலியையே தூக்கிக் கொண்டு சென்றது வரலாறு.  ஆனால் அப்துல் கலாம் வெளியேறியபோது, இரண்டு சூட்கேஸ்களில் தனது உடை மற்றும் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இப்படி அவர் நடக்க ஒரு காரணம் இருந்தது, அப்துல் கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம். ராமேஸ்வரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அப்பா இல்லை. அம்மா தொழுகையில் இருந்தார். வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார். வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை தொழுது கொண்டிருந்தார்.

வந்தவரின் கையில் ஒரு தாம்பூலத்தட்டு இருந்தது. ‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக் கொள்' என்றார். கலாம் ஒருநிமிடம் யோசித்தார். அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும்படியாக ஆகிவிடும். வேறு வழியில்லாமல் கலாம் அந்தப் பரிசுப் பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்தார். வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார். தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக் கொண்டார். ஜைனுல்லாபுதீன் வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் தறிகெட்டுக் கோபம் வந்தது. தாறுமாறாக கலாமைத் திட்ட ஆரம்பித்தார். முதுகில் ஓர் அடியும் விழுந்தது. கலாம் அழ ஆரம்பித்தார். கோபம் தணிந்த பின்பு கலாமை அருகில் அழைத்தார் ஜைனுல்லாபுதீன். ‘இதுபோன்ற பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது.

உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும், என்று அறிவுரை செய்தார். குடியரசுத் தலைவர் பதவி வகித்த கலாமை அவருடைய இறுதி அலுவலக நாளன்று பல வி.ஐ.பி.க்கள் பரிசுப் பொருள்களோடு வந்து சந்தித்தனர். என் தந்தை ஜைனுல்லாபுதீன் எனக்குக் கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருளை வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், என்று புன்னகையுடன் பரிசுப் பொருள்களை வாங்க மறுத்துவிட்டார் கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous July 31, 10:14

    தி கிரேட் மனிதர் .........

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து