முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக அப்துல் கலாம் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான மக்கள் கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளரும் தலை சிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் கடந்த திங்கட் கிழமை மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். பின்னர் அவரது உடல் கவுகாத்தி வழியாக டெல்லி கொண்டு வரப்பட்டது. டெல்லியில் கலாம் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அன்சாரி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதையடுத்து அவரது உடல் மறுநாள் டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கலாம் உடலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, கலெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு கலாம் உடல் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கலாம் உடல் அவரது குடும்பத்தினர் விருப்பப்படி ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து காரில் கலாமின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் ராமேசுவரம் பஸ்நிலையம் அருகில் கீழகாடு பகுதியில் பிரமாண்டமான பிரத்யேக மேடையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த பகுதியை சுற்றிலும் நான்குபுறமும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று கலாமிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாகம்போல் வளைந்து, வளைந்து சென்ற நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினா். தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, ம.தி.மு.க. தலைவர் வைகோ, த.மா.கா தலைவர் வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சாதி மத பேதங்களை கடந்து அனைத்து மதத்தினரும் தங்களின் குடும்ப தலைவரை போல கலாமை எண்ணி கலாமிற்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கலாமின் உடல் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் காரில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அவரின் இல்லம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலாமின் அண்ணன் முத்து மீரா லெவ்வை மரைக்காயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு நேற்று காலை வரை கலாமின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் திரளாக சென்று விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.

 இதன்பின்னர் நேற்று காலை 7.40 மணியளவில் கலாமின் உடல் இறுதி சடங்கிற்காக முறைப்படி குளிக்க வைத்து வெள்ளை துணி அணிந்து உரிய முறையில் சுற்றி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கலாமின் உடலுக்கு இஸ்லாமிய மதகுருமார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதற்கடுத்தபடியாக 9.55 மணிக்கு கலாமின் உடல் கலாமின் வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு பச்சை நிற போர்வை போர்த்தி எடுத்து கொண்டு செல்லப்பட்டது. அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு மதகுருமார்கள் கலாமின் ஆத்மா சாந்தியடையவும், மறுமை வாழ்விற்காகவும் சிறப்பு துஆ ஓதப்பட்டது. பள்ளிவாசல் இமாம் அப்துல்ரகுமான் யாசின் ஓதினார்.  இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு சுதந்திர தேசிய கொடி கலாமின் உடலை சுற்றிலும் போர்த்தப்பட்டு முப்படை வீரர்களின் மரியாதைக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

வழிநெடுகிலும் ரோட்டின் இருபுறமும், கட்டிடங்களின் மேற்பகுதியிலும் மக்கள் அலைகடலென திரண்டு நின்று கலாமின் உடலை கண்டு கண்கலங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலாமின் உடலை கொண்டுவந்த ராணுவ வாகனத்தினை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓடிவந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பேண்டு வாத்தியங்கள் முழங்க முப்படையினரின் அணிவகுப்புடன் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பேய்க்கரும்பு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. கலாமின் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள பேய்க்கரும்பு பகுதிக்கு கலாமின் உடல் கொண்டுவரப்பட்டபோது அந்த பகுதியில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாரத்மாதாகீ ஜே என்று குரல் எழுப்பி கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக பேய்க்கரும்பு பகுதியில் கலாமின் உடல் நல்லடக்கத்திற்காக இடம் தயார் செய்யப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தடைந்தார். அவரை கவர்னர் ரோசையா வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் ஒரே காரில் ஏறி நல்லடக்கம் நடக்கும் பகுதிக்கு சென்றனர். இறுதிசடங்கிற்காக கொண்டுவரப்பட்ட கலாமின் உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் அங்கு சென்ற பிரதமர் மோடி கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கவர்னர் ரோசையா, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன், சுந்தர்ராஜன், உதயகுமார், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர்  அஞ்சலி செலுத்தினர்.

இதற்கடுத்தபடியாக கேரளா கவர்னர் சதாசிவம், முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர்கள் ஜோசப், சேட்டன், டோனியர் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மாநில தலைவர் இளங்கோவன், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, ம.தி.மு.க. தலைவர் வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள் ராமகிருஷ்ணன், நல்லகண்ணு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர் முப்படைவீரர்கள் வீரவணக்கம் செலுத்திய பின்னர் கலாமின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு கலாமின் உடல் முப்படை வீரர்கள் மூலம் எடுத்து சென்று நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கலாமின் உடல் இஸ்லாமிய முறைப்படி மதகுருமார்கள் சிறப்பு பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து இஸ்லாமிய பிரமுகர்கள் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் சிறப்பு துஆ ஓதினர். கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து நடந்து சென்று கலாமின் அண்ணன் முத்துமீரா லெவ்வை மரைக்காயர் இருந்த பகுதிக்கு சென்றார். அவரை பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கி தனது இரங்கலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற பிரதமர் மோடி காரில் ஏறி மண்டபம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார்.

நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய கலாம் உடல் நல்லடக்கம் நடைபெற்றதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திரளாக வந்து கலந்து கொண்டதால் ராமேசுவரம் பகுதியே திணறியது. கலாமின் இறுதிசடங்கில் 4லட்சம் பேர் கலந்து கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் வந்ததையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் 4 ரோந்து கப்பல்கள் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டன. ஒட்டுமொத்த ராமநாதபுரம் மாவட்டமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கவலையுடன் காத்திருந்து அஞ்சலி செலுத்தியது அனைவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறுதிசடங்கு நிகழ்ச்சி நடந்து முடிந்து அனைவரும் கலந்து சென்றபின்னரும் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று மலர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் ராமேசுவரத்திற்கு திரண்டதால் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாகவே காட்சியளித்தது. கலாமின் உடல் நல்லடகத்திற்காக மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கலாமை காண மக்கள் சென்றதால் மாவட்டம் முழுவதிலும் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து