முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனிஅறைகள் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங்கில் திறந்தார்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

Jayalalitha 04 Aug 2015

சென்னை, ஆக. 4, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏழு தாய்ப்பால் வங்கிகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் களைவதன் மூலம் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி
மூலமாகத் திறந்து வைத்தார் . அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா , பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளில் தாய்மார்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள சிறிய மேஜை மற்றும் பெஞ்ச் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி அறைகளை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குழந்தை பிறந்த உடன் சில தாய்மார்களுக்கு முற்றிலுமோ அல்லது போதுமான அளவுக்கோ தாய்ப்பால் கிடைப்பதில்லை. எடை குறைந்த குழந்தைகளையும், குறைமாதக் குழந்தைகளையும் காப்பாற்ற தாய்ப்பால் மிக அவசியம். நோய்வாய்ப்பட்ட குழந்தை, தீவிர சிகிச்சையில் உள்ள தாயின் குழந்தை, தாய்ப்பால் சுரப்பு குறைந்த அல்லது இல்லாத தாயின் குழந்தை, தத்து எடுக்கப்பட்ட குழந்தை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தை, மகப்பேறு மரணம் அடைந்த தாயின் குழந்தை ஆகிய குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியம். எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின் பேரில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி 2014ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுபோன்ற தாய்ப்பால் வங்கிகளை மற்ற அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு மகப்பேறு, நோயியல் நிலையம் மற்றும் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏழு தாய்ப்பால் வங்கிகளை முதலமைச்சர்ஜெயலலிதா திறந்து வைத்தார். ஒவ்வொரு தாய்ப்பால் வங்கிக்கும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான உறைநிலை  குளிர்பதனக் கருவி, கிருமி நீக்கும் கருவி, தாய்ப்பால் எடுக்கும் கருவி, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்து நவீனக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து தானமாக கொடுக்கும் தாய்ப்பாலை பதப்படுத்தி மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் வங்கிகளில் சேமித்து, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்கமுடியும். இதன் மூலம் பச்சிளங்குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, குழந்தைகளின் சிசு இறப்பினை தவிர்க்க முடியும். இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர். ஞானதேசிகன், ., தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச்
செயலாளர் டாக்டர். த. பிரபாகர ராவ், , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர் திரு தர்மேந்திர பிரதாப் யாதவ், ., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சே. கீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து