முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்: சோனியா தலைமையில் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.  தங்கள் கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.  மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி ஆகியோர் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அப்போது பேசிய கார்கே, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளும் வண்மையாகக் கண்டித்துள்ளன. மக்களவையை தாங்கள் முடக்குவோம் என உறுதியளித்துள்ளனர் என்றார். 

சோனியா காந்தி பேசும்போது, மக்களவையை சுமுகமாக நடத்த வேண்டியது அரசின் கடமை ஆனால் அதை விடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்றார்.  காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என பாஜக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி விரோத கொள்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முக்தார் அப்பாஸ் நாக்வி கூறினார்.  மேலும், எந்தச் சூழலிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முதல்வர் சிவ்ராஜ் சவுகானுக்கு கட்சி துணை நிற்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்