முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தின் 12 மாதங்களுமே திருவிழா நடைபெறும் சிறப்புமிக்க தலமாகும். அதன்படி மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று காலை 10.06  மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 4 ஆவணி மூலவீதிகளில் சந்திரசேகரர் உற்சவம் நடக்கிறது. 12 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் தினமும் இரவில் அம்மன் - சுவாமி கற்பக விருட்சம்,வெள்ளி சிம்மவாகனம், பூத, அன்ன வாகனம், தங்க சப்பரம், கைலாசபர்வதவாகனம், யானை வாகனம், நந்திகேசுவரர் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் 4 ஆவணி மூலவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

18ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்து லீலையும், 19ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 20ம் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 21ம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தது, 22ம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 23ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, 25ம் தேதி நரியை பரியாக்கியது போன்ற நிகழ்சசிகள் நடைபெறுகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை வருகிற 26ம் தேதி நடக்கிறது. 27ம்தேதி விறகு விற்ற  லீலையும், 28ம்  தேதி பவனியும், இரவில் சப்தாவர்ண சப்பர பவனியும் நடக்கிறது. 29ம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

முன்னதாக வருகிற 24ம் தேதி சுவாமி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மேலமாசிவீதியில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எழுந்தருளுகிறார்கள். அங்கு பிற்பகலில் வளையல் விற்ற லீலை நடக்கிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறஉகிறது. பின்னர் 7.33 மணி முதல் 7.57 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு  பட்டாபிஷேகம் செய்யப்பட்டு அவருக்கு கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் சகல விருதுகளுடன் செங் கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் சுந்தரேசுவரர் ஆட்சி நடப்பதாக ஐதீகம். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்