முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை: நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் மீது மத்திய அரசின் உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு விதித்த தடையை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. மேகி நூடுல்ஸின் தரம் குறித்து புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு மேகில் நூடுல்சுக்கு தடை விதித்தது.

இதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், அஸ்ஸாம், பீகார், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், குஜராத், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களும் மேகி நூடுல்சுக்கு தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கடைகளில் இருந்து அகற்றப்பட்டு சிமெண்ட் ஆலைகளில் அழிக்கப்பட்டன. இத்தடையை எதிர்த்து மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆஜரான நெஸ்லே நிறுவனத்தின் வழக்கறிஞர், நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகியில் காரீயம் கலந்திருப்பது குறித்த சோதனையை மேற்கொள்ள இந்தியாவில் எந்த ஆய்வகத்திலும் நவீன வசதி இல்லை. பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் தங்கள் நிறுவனம் பெற்ற செல்வாக்கை இந்த தடை உத்தரவு அழித்துள்ளதாக வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மேகி மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸின் தரம் குறித்து புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்புதிய ஆய்வுகளில் காரீயம் இல்லையென்பது உறுதியானால் 6 வாரங்களுக்குப் பின் மேகி நூடுல்ஸை சந்தைகளில் விற்பனை செய்யலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தடை நீக்கப்பட்ட செய்தி வெளியான உடனேயே பங்குச் சந்தைகளில் நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் 3.5% உயர்வை எதிர்கொண்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்