முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஒபாமா இடையே ஹாட்லைன் வசதி

சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா, நேரடி தொலைத் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய ஹாட் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டனில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்காசிய பிரிவு இயக்குனரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விருப்பத்திற்கிணங்க இந்த ஹாட் லைன் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஹாட் லைன் வசதி மூலம் இருநாட்டுத் தலைவர்களும் இனி நேரடித் தொலைத் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள இயக்குனரகம், இதுவரை இந்த வசதியை இருவரும் உபயோகிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. பல்வேறு கொள்கைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவதால், இந்திய பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்தித் தரும் திட்டம், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. தற்போது இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் நேரடித் தொலைத் தொடர்பு வசதி பெற்ற நாடுகளில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனாவிற்கு அடுத்து நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அதே வேளையில் இந்திய பிரதமர் பெற்றுள்ள முதல் ஹாட் லைன் வசதி இது என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன், அமெரிக்க அதிபருக்கும் ரஷ்ய அதிபர், பிரிட்டன் அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோர் பேசும் வகையில் மட்டுமே ஹாட்லைன் வசதி இருந்தது. இப்போது இந்த பட்டியலில் இந்திய பிரதமரும் இணைந்துள்ளார். சர்வதேச அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அல்லது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இவர்கள் ஆலோசிப்பார்கள். எந்த பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்திய பிரதமருக்கு ஹாட்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சு இருந்தது. இதில் பாகிஸ்தானுடன் மட்டுமே ஹாட்லைன் வசதி அமைக்கப்பட்டது. சீனாவுடன் இதுவரை ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்