முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் அப்துல் கலாம், செந்தூர் பாண்டியன், எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல்

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர்  செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர்  எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோரின்  மறைவுக்கு இன்று தமிழ்நாடு சட்டசபையில்  இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மவுன அஞ்சலி செலுத்தினார்கள். சட்சபை  நேற்று  காலையில் கூடியது. அப்போது சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். இந்திய முன்னாள் ஜனாதிபதி  டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வருமாறு :–

‘‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’’ என்றும் ‘‘அணுசக்தி நாயகன்’’ என்றும் ‘‘தலைசிறந்த விஞ்ஞானி’’ என்றும் ‘‘திருக்குறள் வழி நடப்பவர்’’ என்றும் ‘‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’’ என்றும் போற்றப்படுபவரும்   தன்னுடைய பொன்மொழிகளாலும்  கவிதைகளாலும்  எழுத்துக்களாலும் தனது எளிமை மற்றும் மென்மையான அணுகுமுறையினால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவரும்  நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தவரும்  தமிழகத்தின் மண்ணின் மைந்தருமாகிய பன்முகத் தலைவர் ‘‘பாரத ரத்னா’’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  27.7.2015 அன்று தனது 83-வது அகவையில் திடீரென மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

இராமேஸ்வரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து,   தமது கடின உழைப்பினாலும் ஒருமுக சிந்தனையாலும் விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராக விளங்கினார். தன்னம்பிக்கையைவளர்த்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அதன் பின்னரும் அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது.  2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டவர்.

இந்தியா வல்லரசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே  தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ‘கனவு காணுங்கள்’     அது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டுமென்றும் வெற்றிபெற வேண்டுமென்றால் பதட்டமில்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான  சிறந்தவழி   என்றும்  வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார். இளைய தலைமுறையினரும்  மாணாக்கர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றிட உந்துசக்தியாக விளங்கினார்.

அன்னாரது பிறந்த தினம் ‘‘இளைஞர் எழுச்சி நாளாக’’ தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்னாரது நினைவைப் போற்றும் விதமாக ‘‘டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது’’ சுதந்திர தினத்தன்று தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன்  செந்தூர் பாண்டியன்திருநெல்வேலி மாவட்டம்  கடையநல்லூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவரும்  விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னை இளம் வயது முதல் பொது வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காக பணியாற்றியவரும்  1986 முதல் 1991 வரை கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 1996 முதல் 2001 வரை கடையநல்லூர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற்றிய வரும்  ஜூலை 2011 முதல் மே 2015 வரை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராகவும்  சுற்றுலாத் துறை அமைச்சராகவும் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியவரும்  இனிய பண்பும்  எளிமையும் தன்னகத்தே கொண்டவரும்  அனைவரிடத்திலும் நட்புறவோடும், அன்போடும் பழகியவருமான  பூ. செந்தூர் பாண்டியன் சிறிது காலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 11.7.2015 அன்று தனது 64-வது அகவையில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இசையமைப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் என்றும் எம்.எஸ்.வி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும்  தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்தவரும்  தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால் தமிழ் திரையுலகத்தினருக்கும் குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும்  பழம்பெரும் இசை அமைப்பாளருமான திரையுலக இசை மேதை எம். எஸ். விஸ்வநாதன்  14.7.2015 அன்று உடல்நலிவுற்று மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும்  ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

எம்.எஸ். விஸ்வநாதன் அன்பும்  அடக்கமும்  எளிமையும்  இறை பக்தியும் உள்ளவர். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு மோகன ராகத்தில் இசை அமைத்து தமிழர்களின் இதயத்தில் குடிகொண்டு, அனைவராலும் போற்றப்படும் இசையமைப்பாளர் ஆவார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்  திரை உலக நண்பர்களுக்கும்  ரசிக பெருமக்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறி சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.

அதைத்தொடர்ந்து மறைந்த பெருமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்