முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி தென்தமிழகத்தில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக நான்காண்டுகளில் 710 மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்கள் அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியும் , தென் தமிழகத்தில் புதிய பல்மருத்துவமனையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.,

தமிழக சட்டபேரவையில் 110விதியின் கீழ் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கையில் 22 நலத்திட்டங்களின் பட்டியலை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஏற்கும் வகையில், 10 கோடி ரூபாய் தொகுப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க, மாநில அரசின் பங்காக 10 கோடி ரூபாயும், காப்பீட்டு தொகையிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கப் பெறும் தொகையிலிருந்து ஒரு பங்கினையும் சேர்த்து ஒரு தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியிலிருந்து, இதுவரை 2,506 பயனாளிகள் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கென 177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதியிலிருந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து வருவதால், இந்த தொகுப்பு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தொகுப்பு நிதிக்கு - கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 9. சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனலைசர் கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுண்டர் கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

10. நிர்வாக வசதிக்காகவும், மக்களின் சிரமங்களை போக்கவும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய வட்டங்களை பிரித்து, புதிய வட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 49 புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 வட்டங்களில், புதிய தாலுக்கா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

11. சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள முட நீக்கியல் சிகிச்சை மையம், மாநிலத்தில் உள்ள முடநீக்கியல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குகிறது. முடநீக்கியல் நோயாளிகள், மற்ற நோயாளிகளிலிருந்து மாறுபட்டு இருப்பதால், அவர்களுக்கு மருந்துகள் வழங்க மற்ற துறைகளை விட கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் சிகிச்சை மையத்திற்கு, சிறப்பு மருந்துகளுக்காக 5 கோடி ரூபாய், சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

12. சென்னை அரசு பொது மருத்துவமனையில் பர்னாடு கதிர்வீச்சு நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் அணு மருத்துவத்தைப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் மூலம் 25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் இமேஜிங் மற்றும் சிகிச்சை திட்டம் மேம்படுத்தப்படும்.

13. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான சேவை செய்து வருகிறது. இம்மருத்துவமனைக்கு சென்னை மற்றும் வட தமிழகத்திலிருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலமான ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக உயர்தர ஆய்வகம் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

14. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருந்துக்கு மட்டும் 307 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டம், நகரும் மருத்துவப் பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

15. தமிழ்நாட்டு மக்களுக்கு தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாகும். இந்திய மருத்துவக் குழுமத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள், தேவையான கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆண்டிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் எனது அரசு புதிய மருத்துவ கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளினால், கூடுதலாக 710 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளேன். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

16. தமிழ்நாட்டில், ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, இந்த பல் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் காரணமாக, முதுகலை பல் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை 35-லிருந்து 58-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

17. நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்கு 6 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் விடுதி கட்டடம் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

18. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு தங்கும் குடியிருப்புகள் இருந்தால், அங்கு அவர்கள் தங்கி மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் குடியிருப்புகளும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், 30 தங்கும் குடியிருப்புகள் மற்றும் 400 மாணவர்கள் அமரும் வகையில் விரிவுரை அரங்கமும் கட்டப்படும்.

19. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள்
அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இத்தகைய வசதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதல் கட்டமாக 20 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன்.

20. கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்