முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித-வன உயிரின மோதலை தடுக்க 5 இடங்களில் அதிவிரைவு குழுக்கள் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: மனித வன உயிரின மோதலை தடுக்க 5 இடங்களில் அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா விதி 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு.  ஒரு நாட்டின் வளம் வன வளத்தில் அடங்கியுள்ளது.எனவே எனது தலைமையிலான அரசு வன வளம் மற்றும் பசுமைப் போர்வையினை பாதுகாப்பதிலும் வன உயிரினங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதிலும் தமிழக  மக்களக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வழங்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இதனை மேலும்  செட்மைப்படுத்தும் வகையில் பின் வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் மற்றும் கரடிகளால் மனித-வன உயிரின மோதல்கள் தொடர்பான  நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அத்தகைய மோதல் சூழ்நிலைகளில் அதிவிரைவான  செயல்பாட்டுக்கென ஒரு குழுவினை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதி நவீன கருவிகளுடன் சிறப்புப் பயிற்சி  பெற்ற பணியாளர்களைக் கொண்டதாக அமையப் பெறும் இக்குழு, விரைவாகச் செயல்படுவதுடன், சிக்கலான  சூழ்நிலைகளையும் மேலாண்மை செய்யும். மேலும், புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித-வன  உயிரின மோதல்களில் ஈடுபடும் மாமிச உண்ணிகளை எதிர்கொள்வதற்கு அதிவிரைவு குழுக்கள் உருவாக்குவதை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஊட்டி, கூடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 2015 - 2016-ஆம் ஆண்டில் 8 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்படும்.ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை மற்றும் சித்தேரி மலைப் பகுதிகள் சந்தன மரங்கள் இயற்கையாக வளரும் தாயகமாக உள்ளன. வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சந்தன மரங்கள் அதிகம் வளரும் இடங்களுக்கு அருகில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் காப்புக் காடுகளில் சந்தன மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பளித்து கூடுதல் வாழ்வாதார பாதுகாப்பை உருவாக்குவதுடன், சந்தன மர வளத்தைப் பெருக்கி அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தரும். இத்திட்டம் நாளடைவில் வேலை வாய்ப்பிற்காக பழங்குடியினர் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்தலைத் தடுக்கும். இத்திட்டத்திற்கு ஆண்டொன்றிற்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் பத்து ஆண்டுகளுக்கு
மொத்தம் ரூ 100 கோடி ரூபாய் செலவாகும். நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு ரூ 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவில் மிகவும் நகரமயமானதும், தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணியாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை உள்ளது. எனவே காற்றின் தன்மையை நகர மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் கண்காணிப்பது மற்றும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

எனவே காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் காற்றின் தன்மை குறித்த தகவல்களை முழுமையாக சேகரிக்க இயலும். தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் இத்தகைய தொடர் காற்று கண்காணிப்பு அமைப்பானது இந்தியாவிலேயே முதன்மையானதும் மற்றும் தனிச் சிறப்பும் வாய்ந்ததாகும். இவ்வாறு அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்