முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையின் போது காவலில் இருந்தவர் மரணம் போலீசுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் - குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சமூகத்தினர்  தங்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 9பேர் பலியானார்கள். இதனால் அந்த மாநிலத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது . அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் மற்றும் துணை நிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர் படேல் சமூகத்தினர் 22வயது ஹர்திக் படேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த போராட்டத்தின் போது ஹர்திக் படேல் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த சமூகத்தினர் புதன் கிழமையன்று பந்த் அறிவித்தார்கள். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது 9பேர் மரணம் அடைந்தார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஷெடாங் படேல் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அந்த இளைஞர் மரணம் அடைந்தார்.அந்த இளைஞர் பபு நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.போலீஸ் காவலில் இருந்த அந்த நபர் இறந்ததைத்தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த இளைஞர் மீது போலீசார்கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள்.

இந் த இளைஞர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தாயார் புகார் செய்தார். இந்த புகாரை போலீசார் எப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த இளைஞரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இளைஞர் மரணம் குறித்து போலீசாரை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.ஷெடாங்  மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசும் உத்தரவிட்டிருக்கிறது. ஷெடாங்  மரணத்தை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் இளைஞரின் உடலில் பல காயங்கள் இருப்பது தெரிய வந்தது.அவருக்கு உள் காயங்களும் வெளிக்காயங்களும் ஏற்பட்டு இருந்தன.

போலீசார் கடுமையாக அடித்ததில் அவர் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்தது. படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது 10பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.இதில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டிலேயே இறந்திருக்கிறார்கள். இளைஞரின் மரணத்தில் போலீசார் குற்றவாளி என தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என்று மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.போலீசார் நடத்திய தடியடி குறித்து விசாரணை நடத்தவும் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் உத்தரவிட்டுள்ளார். படேல் சமூகத்தினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து சட்டசபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர் கட்சியினரான காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். சட்ட சபையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த வன்முறை குறித்து அமளியில் ஈடுபட்ட போது அவர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

குஜராத் மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. புதிய வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.ராணுவத்தினர் பதட்டமான இடங்களில்தொடர்ந்து கொடி அணி வகுப்பு நடத்தினார்கள். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.அந்த இடங்களில் புதிய வன்முறை இல்லாததால் அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது என்று நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்