முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்கள் குடுமபத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிதி

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், சிந்தாதுளி கிராமத்தில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை காவலர்கள் 2 பேரின் (ஒருவர் – எம். ரவிச்சந்திரன் – தலைமை காவலர். இன்னொருவர் ஜி.எஸ்.அபிலாஷ் – காவலர்) குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட காவலர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பி.பழனியப்பன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
நிதி உதவியை பெற்றவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.

நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட எம். ரவிச்சந்திரன் (வயது 44), ஜி.எஸ். அபிலாஷ் (வயது 27) ஆகியோரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நெங்கல் திம்மே நத்தம் கிராமத்தை சேர்ந்த எம். ரவிச்சந்திரன் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவி யசோதாவிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார். ரவிச்சந்திரனுக்கு பூஜா, ரூபாஸ்ரீ என்ற மகளும், ஜெயசந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

மாவட்ட கலெக்டர் த.பொ.ராஜேஷ், காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, கே.இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கிருஷ்டி, வருவாய் கோட்டாட்சியர் த.சாந்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், மாவட்ட ஊராட்சிக்குழு துனை தலைவர் கோ.ரவிசந்திரன், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சி.பெருமாள், சி.வி.ராஜேந்திரன், கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, காவோிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் வாசுதேவன், முன்னாள் படை வீரர் நலத் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ஜெ.ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், மஞ்சாலுமூடு கிராமத்தை சார்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஜி.எஸ்.அபிலாஷ் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவி சுஜித்திராகுமாரியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார். அபிலாஷுக்கு ஒன்றரை வயதில் வைகா என்ற பெண் குழந்தை உள்ளது.

மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா சவான், முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ., ஏ. நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன், தமிழ்நாடு மாநில மீன்வளக் கூட்டுறவு இணையத்தலைவர் எம். சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், சுதர்சன், வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.மதியழகன், என். ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். குண்டுகள் முழங்க நல்லடக்கம் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம். ரவிச்சந்திரன், ஜி.எஸ். அபிலாஷ் ஆகியோரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி

26.8.2015 அன்று ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், சிந்தாதுளி கிராமத்தில் நக்சல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் எம். ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை காவலர் ஜி.எஸ். அபிலாஷ் ஆகிய இருவரும் நக்சலைட்டுகளின் திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன் என்று ஜெயலலிதா, தன் அறிக்கையில் கூறியுள்ளார். நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய எல்லைப் பாதுகாப்பு படை தலைமைக் காவலர் எம். ரவிச்சந்திரன் மற்றும் காவலர் ஜி.எஸ். அபிலாஷ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர் அபிலாஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்