முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி, திறமையில் முதலிடத்தில் முதல்வர் ஜெயலலிதா: 2016 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் மக்கள் ஆய்வு மைய கருத்துக்கணிப்பில் தகவல்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் வரும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.  இந்த கருத்துக்கணிப்பின்போது தமிழகத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் சட்டம்- ஒழுங்கு சீரான முறையில் பராமரிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் மக்கள் ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பணியாற்றும் 20 கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்றத்தொகுதிகளில் சட்டமன்றத்தேர்தல் கள நிலவரம் குறித்து முன்னோட்டமாக மாநில அளவிலான கள ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த கள ஆய்வில் 20 வயது முதல் 60 வயதுக்கும் மேற்பட்ட பிரிவினர் பங்கேற்றனர். பல்வேறு தொழில் புரிவோர். அரசு ஊழியர் , பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று 3 ஆயிரத்து 300 பேரிடம் இந்த கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் சென்னை அரசினர்  தோட்டத்தில் உள்ள பிரஸ்கிளப்பில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த கருத்துக்கணிப்பின்போது வரவிருக்கும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் அரசியல் கட்சிகள் காய்நகர்த்த தொடங்கியிருக்கும் பட்சத்தில் இப்போதைய அரசியல் பின்புலத்தில் தமிழகத்தின் முதல்வராவதற்குரிய தகுதி, திறமை, வாய்ப்பு ஆகியவை அமையப் பெற்ற ஆளுமைகளாக தமிழக மக்கள் மதிப்பீடு செய்யும் பட்டியலில் இடம் பெறும் முதல் ஐந்து தலைவர்களில் முதலாவதாக முதல்வர் ஜெயலலிதாவை தெரிவித்தனர். அதாவது முதல்வர் ஜெயலலிதாவே முதலிடத்தில் உள்ளார். அனைத்து வயதினரும் அதிமுக ஆட்சியை விரும்புவதாகவும் பெண்கள் மத்தியில் அதிமுகவுக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறை காரணமாக மீண்டும் அதிமுகவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் விலையில்லா  பொருட்கள் வழங்கும் திட்டத்தில் விலையில்லா மிக்ஸி., மின்விசிறி, மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தை 89 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். திருமண உதவித்திட்டத்திற்கு 73 . 6 சதவீதம் பேரும் , மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை 72.8 சதவீதத்தினரும், முதியோர் உதவித்தொகை திட்டத்தை 69.7 சதவீதத்தினரும் அம்மா உணவகத்திற்கு 56. 2 சதவீதத்தினரும் வரவேற்றுள்ளனர். அதாவது அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் கட்சி எது என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதில் அதிமுக தான் பிரச்னைகளுக்கு திறமையுடன் தீர்வு காணும் கட்சியாக பதில் அளித்தனர். மின்வெட்டுக்கு விடைக்கொடுத்த ஆட்சியாக 65.1 சதவீதத்தினர் கருதுவதாகவும் சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிப்பதாக 49.8 சதவீதத்தினரும் உணவு பொருட்கள் விநியாகத்தில் சீரான நடைமுறை பின்பற்றப்படுவதாக 63.9 சதவீதத்தினரும் நலத்திட்டங்கள் பாராட்டத்தக்கவகையில் 51.9 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.  இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்