முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீட்டில் அனைவரும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை: மத்திய அரசுக்கு வாசன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஒரு கொந்தளிப்பான சூழல் அம்மாநிலத்தில் உருவாகி வருகிறது. இட ஒதுக்கீடு என்பது இதுவரை கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகும். இந்த அடிப்படையில் இன்றுவரை ஆதிதிராவிட மக்களும், பழங்குடியின மக்களும், இதர பிற்பட்ட சமுதாய மக்களும் இட ஒதுக்கீட்டில் உரிய பயன் அடைந்துவருகிறார்கள். இட ஒதுக்கீடு பிரச்சனை கல்வி மற்றும் சமுதாய ரீதியானது மட்டுமல்ல. இதில் எடுக்கப்படும் முடிவு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே இட ஒதுக்கீட்டால் பயன்பெறுவோர் பாதிக்கப்படாமலும் இருக்க வேண்டும்.

இத்தகைய சட்ட ரீதியான, சமூக ரீதியான பிரச்சனையில் நிதானமாகத்தான் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமித்து, பொதுமக்களின் கருத்தையும் அறிந்து அமைதியான சூழலில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதுவரை குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் போராட்டத்தில் ஈடுபடுவோரை அழைத்து, கலந்து பேசி அமைதிப்படுத்த வேண்டும். சுமூகமான சூழ்நிலை உருவான பின்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் குஜராத்தில் இன்று எடுக்கப்படும் முடிவு இந்தியா முழுவதும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

ஆகவே அமைதியை நிலை நாட்டி, நிபுணர் குழுவை நியமித்து, சமூக நீதியை காத்திடும் வகையில், சட்ட ரீதியாக செல்லுபடியாகும் ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினை முழுமையாக பெற்று பயன் பெற மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்