முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதிய விவகாரம்: அருண் ஜெட்லி திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - முன்னாள் ராணுவ வீரர்கள் கேட்பதுபோல, ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்கள், 1996-2005 வரை, 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்கள் என பிரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 2008-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் அதிக ஓய்வூதியம் பெறுகின்றனர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பாரபட்சம் நிலவுகிறது என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ அளிக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தி நிறுவத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராணுவத்தில் பணியாற்றி குறைந்த வயதில் (35 - 38) ஓய்வு பெறும் வீரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், முன்னாள் ராணுவ வீரர்கள் கோருவதுபோல, ஆண்டு தோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க முடியாது. அதுபோல உலகில் எங்கும் ஓய்வூதியம் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படவில்லை. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கணக்கிடுவதில்தான் சிக்கல் நிலவுகிறது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது பற்றி என்னிடம் தனிப்பட்ட முறையில் ஒரு திட்டம் இருக்கிறது. இதேபோல மற்றவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கருத்துகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நியாயமானதாக இருக்க வேண்டும். அதற்காக ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க முடியாது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்