முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தீவுத்திடலில் செயற்கை இசை நீரூற்று: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை தீவுத்திடலில் செயற்கை இசை நீரூற்று அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கூடுலாக நலிந்த கலைஞர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம்  நிதி உதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை சட்டசபையில்  சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இன்று கூறினார்.

சட்டசபையில் நேற்று சுற்றுலா பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்திற்கு பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வௌியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சென்னையில் ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட  விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ.1,500 லிருந்து ரூ.3 ஆயிரமாகவும், ஊரக ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலகர்கள் ஆகியோரின் தொகுப்பூதியத்தினை ரூ.1000லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டிருக்கிறார். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.39 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசை கல்லூரிகளில் அலுவலக பயன்பாட்டிற்கும், மாணவர்களின் பயன்பாட்டிற்கும் பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும், புதிதாக ஜெராக்ஸ் யந்திரங்கள் வாங்குவதற்கும் தொடரா செலவீனமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனரின் அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு புதிய பொலீரோ கார் வாங்கிட ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயதான கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2015–16ம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மகாபாரதம், ராமாயணம், பாகவதம் போன்றவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை மைய பொருளாக வைத்து வர்ண களஞ்சியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் கலை விழாவினை நடத்திட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொன்மை சிறப்புமிக்க தோல்பாவை கூத்து, பொம்மலாட்டம் ஆகிய கலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைய செய்யவும், அக்கலைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப்பூதியம், பயிற்சி பெறுவோருக்கு நிதி உதவி மற்றும் பொம்மைகள், தோல் பொம்மைகள் வாங்குவதற்கு நிதி உதவி உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்யப்படும்.

கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த தகுதியுள்ள நூல்களை பதிப்பிக்க நூலாசிரியர்களுக்கு நிதி உதவி, நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களை பதிப்பிக்க தொடரா செலவீனமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகத்தின் உலகப் புகழ் பெற்ற படிம காட்சி கூடத்தில் 2003ம் ஆண்டு ஜெர்மானிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சி பெட்டிகளை வடிவமைத்து படிமங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அக்காட்சி பெட்டிகளில் உள்ள மின்னொளி அமைப்புகளுக்கு மாற்றாக நவீன எல்இடி மின்னொளி அமைப்புகள் அதற்கான பேனல்களுடன் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தற்கால ஓவியங்கள் மற்றும் ராஜா ரவிவர்மா ஓவியங்கள் காட்சி அமைக்கப்பட்டுள்ள  வளர் கலை கூடத்திலும் நிறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி படிம கூட காட்சி பெட்டிகளை நவீனப்படுத்த ரூ.30 லட்சமும், வளர் கலை கூட காட்சி பெட்டிகளுக்கு ரூ.20 லட்சமும் ஆக மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருவள்ளூர் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பட்டறை பெரும்புதூரில் ஓடுகின்ற கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள ஆனைமேடு, இருளந்தோப்பு கிராம நத்தம் ஆகிய பகுதிகளில் பண்டை மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றின் தொடக்கக் கால சான்றுகளாக மணல் திட்டுகளில் தொல்லியல் எச்சங்களான கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கறுப்பு நிற பானை ஓடுகள் வரலாற்றின் தொடக்க காலத்தை சேர்ந்த தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் இவ்வூரின் கோவில்களில் பழமை வௌிப்படுத்தும் முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பல்லவர், சோழர், விஜயநகர பேரரசுகளை சார்ந்தவை ஆகும். எனவே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் வாழ்ந்த பண்டை தமிழ் மக்களின் சமூக பொருளாதாரம், அரசியல் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றினை வௌிகொணர முதல்வர் ஜெயலலிதா தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை புராதன நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் 6 வார கால குறுகிய பயிற்சியை கோவில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த 44 பொறியாளர்களுக்கு 2 அணிகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியானது பண்டை கோவில்களை தொல்லியல் உதவியோடு பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு செய்வதற்கு பொறியாளர்களுக்கு மிக பயனுடையதாக அமைந்தது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் 2015–16ம் நிதி ஆண்டிலும் இப்பயிற்சியினை இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் சுமார் 40 பொறியாளர்களுக்கு புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் பயிற்சி 6 காலத்திற்கு அளிக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேலே சொன்னது போல இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் 6 வார கால குறுகிய பயிற்சியை கோவில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த 44 பொறியாளர்களுக்கு 2 அணிகளாக அளிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையில் கோவில் கட்டிடங்கள், ஓவியங்கள் பாதுகாத்தல், கோவில்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு செயல்களில் தினசரி நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு கொண்டு பணியாற்றி வரும் 50 செயல் அலுவலர்களுக்கு புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் பயிற்சி 4 வார காலத்திற்கு அளிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவரை 39 இடங்களில் அகழாய்வு செய்து கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அகழ் வைப்பகங்களில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த அகழ் வைப்பகங்கள் அப்பகுதி அரசியல் பண்பாடு தொடர்பானவற்றை வௌிகாட்டுகிறது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை திருமலைநாயக்கர் மகால் அகழ் வைப்பகம், தஞ்சாவூர் ராஜராஜன்  அகழ் வைப்பகம், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம்  அகழ் வைப்பகம், தரங்கம்பாடி டேனீஸ் கோட்டை  அகழ் வைப்பகம், சென்னை தலைமை செயலக அகழாய்வு காட்சிக்கூடம் ஆகியவற்றில் உள்ள தொல் பொருட்கள், அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் உள்ளூர் வரலாறு, வரலாற்று சின்னங்கள் ஆகியவற்றினை நவீன எல்இடி டி.வி., இன்வெர்ட்டர், ஊடக கருவிகள், தேவையான உள் கட்டமைப்பு மற்றும் தேவையான உபகரணங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.

மேலும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி, சுற்றுலா வரவேற்பு மையம்  ஒன்று கட்டுவதற்கு ரூ.7 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.

இயற்கை எழில்மிகுந்த சூழலில் அமையப்பெற்றுள்ள தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல்லில் வருகை புரியம் சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆசியாவின் மிக நீளமான மெரீனா கடற்கரையின் அருகில் அமைந்துள்ள சென்னை தீவுத்திடலில் ஆண்டு முழுவதும் முக்கிய பொருட்காட்சிகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எனவே இந்நிகழ்ச்சிகளை காண வரும் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகளையும், அதிகம் மகிழுட்டுவதற்காக சுற்றுலா மேம்பாட்டின் ஒரு மைல் கல்லாக விளங்கும் வண்ணம் செயற்கை இசை நீரூற்று சென்னை தீவுத்திடலில் நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்