முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: ஒபாமாவுக்கு செனட் ஆதரவு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அந்நாட்டின் செனட் எனப்படும் மேல்சபையில் ஆதரவு கிடைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி ஈரான் அரசு அணுசக்தி திட்டங்களை தொடங்கியது. இதை தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் சீனா, பாகிஸ்தான் போன்ற அணுசக்தி நாடுகளின் உதவியுடன் தனது அணுசக்தி திட்டங்களை ஈரான் அரசு தொடர்ந்து மேற்கொண்டது.

இதற்கிடையில் ஈரானை வழிக்கு கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. அணு ஆயுதங்களை தயாரிக்கக்கூடாது, அணுசக்தி மையங்களை பார்வையிட சர்வதேச வல்லுநர்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்து அந்நாட்டுடன் கடந்த சில ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து கடந்த மாதம் ஈரான் அரசு வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

ஈரானுடனான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தொடர்ந்து எதர்ப்பு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் ஆதரவு அமெரிக்க எம்பிக்களும், எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க மேல்சபையான செனட்டில் 33க்கும் அதிகமான எம்பிக்கள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் அமெரிக்க மேல் சபையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என கூறப்படுகிறது. இது ஒபாமாவின் வெளியுறவு தொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காவிட்டால் அதிபருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்தத்துக்கு ஒபாமா அனுமதி வழங்கலாம். அதிபரின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு  எம்பிக்களின் ஆதரவு வேண்டும். தற்போது செனட் சபையில் மொத்தம்  உள்ள 100 எம்பிக்களில் மூன்றில் ஒரு பங்கான 33 க்கும் கூடுதலான எம்பிக்கள் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் ஒபாமா முடிவை செனட் சபை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்