முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.300 கோடியில் எல்இடி விளக்குகள் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஊரக பகுதிகளில் ரூ. 300 கோடி செலவில் 8 லட்சம் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் கூறியதாவது:-

கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களிலேயே பல்வேறு அரசு சேவைகளான பிறப்பு / இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு உதவிகள் ஆகியவற்றை மின்னணு சேவை எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கென 2015-16ஆம் நிதி ஆண்டில் 3890 கிராம ஊராட்சிகளில் சேவை மையங்கள் 661 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரகப் பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளின் மின் கட்டண செலவு மற்றும் பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், பசுமைத் தொழில் நுட்பத்தினை ஊக்குவித்திடும் பொருட்டும் நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக 300 கோடி ரூபாய் செலவில் மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், குக்கிராமங்களை வளர்ச்சி அலகாகக் கொண்டு ஒவ்வொரு குக்கிராமத்திலும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கோடு, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்னும் ‘தாய்’ திட்டத்தினை எனது தலைமையிலான அரசு 2011-12 முதல் செயல்படுத்தி வருகிறது.

‘ தாய்’ மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிராமங்களில் உள்ள தெருக்கள் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு அமைக்கப்படும் தெருக்கள், எழிலாக இருப்பதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டவும் பயன்படும். 2015-16 ஆம் ஆண்டில் 400 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற தெருக்கள் 120 கோடி ரூபாய் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்ட தெருக்களாக மாற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நகரப் பகுதிகளின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் உருவாகும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து, முறையாக அப்புறப்படுத்துதல் மிகப் பெரிய சவாலாக அமைந்து உள்ளது. கிராமங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கு எனது அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. கிராம ஊராட்சிகளில் கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் எனது அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2,000 கிராம ஊராட்சிகளில் “தூய்மை காவலர்களை’ கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்பதையும்; இதற்கென 300 கோடி இஹ்ட்ய் செலவிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக 30 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஊரக பகுதிகளை பசுமை மயமாக்கும் வண்ணம் ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் ஆகிய சாலைகளின் இரு மருங்கிலும் மரக் கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இதன் மூலம் 2,000 கி.மீ நீளமுள்ள சாலைகளின் இரு மருங்கிலும், 47 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மரக் கன்றுகள் நடப்பட்டு ஊரகப் பகுதிகள் பசுமை மயமாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்