முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த கலாம் பற்றி மாணவர்கள் மத்தியில் மோடி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - தான் இருக்கும் வரை ஆசிரியர் பணியாற்றியவர் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் என்று ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மானக்ஷா ஆடிட்டோரியத்தில் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி துவக்கி வைத்தார்.  முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட மோடி, கலாஉத்சவ் என்ற பெயரிலான மாணவர்களுக்கான இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்களிடம் மோடி பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் நாளைதான் (இன்று) என்றாலும், நாளை (இன்று) கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விடுமுறை என்பதால் இன்று (நேற்று) உங்களை சந்திக்கிறேன். டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி ஆகியோரை ஒரு ஆசிரியர் தான் உருவாக்குகிறார். ஆனாலும், அவர்கள் ஆசிரியராகவே தொடருகிறார்கள். ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களை அங்கீகரிப்பதையே எனது அரசு நோக்கமாக கொண்டு வருகிறது.மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவே கலா உத்சவ் என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், பதவியில் ஒய்வுபெற்ற பின்னரும் பாடம் எடுத்தார்.  இறந்த கடைசி நாள் வரை கலாம் ஆசிரியராக பணியாற்றினார். அவர் குழந்தைகளையும், மாணவர்களையும் மிகவும் நேசித்தார். எப்போதுமே தன்னை ஒரு ஆசிரியராக நினைவில் கொள்ளப்படவே கலாம் விரும்பினார்.கலைகள் இல்லையெனில் நமது வாழ்க்கை இயந்திரத்தனமாகி விடும். நம் குழந்தைகள் ரோபோவை மாதிரி உருவாகாமல் பெற்றோர் தடுக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையை வடிவமைப்பவர் ஆசிரியர்கள் தான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்