முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை எம்.பி. தேர்தலில் அ தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணன்: ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திடீர் திருப்பமாக கோகுலகிருஷ்ணன் அ தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி 28.9.2015 அன்று புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ரெட்டியார்பாளையம், உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த என்.கோகுல கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 28–-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10–-ம் தேதி தொடங்கியது.வருகின்ற 18–-ம் தேதி மாலையுடன் வேட்புமனு தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைந்து, 19–-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 21-–ம் தேதி கடைசி நாள். 28-–ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் அப்போதே எண்ணப்பட்டு 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளரை மூன்று எம்.எல்.ஏக்களும், சுயேட்சை வேட்பாளர் எனில் பத்து எம்.எல்.ஏக்களும் முன்மொழிய வேண்டும். அப்படி முன்மொழியப்படவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். புதுவையைப் பொருத்தவரை ஆளும் கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் சுயேட்சை எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுக்கு 15 எம்எல்ஏக்களும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும், அண்ணாதிமுகவுக்கு 5 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதனால், ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெறும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். திமுக சார்பில் ஜெகத்ரட்சகனை நிறுத்த திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக கோகுலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதற்கு சில எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த சூழ்நிலையில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் திடீர் திருப்பமாக அண்ணாதிமுகவில் இணைந்தார்.

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை சட்டமன்றத் தொகுதி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று தன்னை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ., அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.அதைதொடர்ந்து அ திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் தேர்தல் அதிகாரி மோகன் தாசை சந்தித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளருக்கான அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. வேட்பு மனுவில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புருஷோத்தமன், அன்பழகன், ஓம்சக்தி சேகர், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன் மொழிந்து கையெழுத்திட்டிருந்தனர். முன்னதாக கதிர்காமம் முருகன் கோவிலுக்கும் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் வேட்பாளர் கோகுல கிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் காமராஜ், எம்.சி. சம்பத் ஆகியோர்சென்று வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர் அங்கிருந்து தேர்தல் அதிகாரியிடம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அ தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. புதுவையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் போன்று ஏற்கனவே 1977–ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். புதுச்சேரி முதல்வராக ராமசாமியும், கவர்னராக குல்கர்னியும் பதவி வகித்தனர். அப்போது இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டதால் எம்.ஜி.ஆர். உதவி நாடப்பட்டது. அப்போது தலித் சமூகத்தை சேர்ந்த வி.பி.எம். சாமி என்பவரை எம்.ஜி.ஆர். வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையின்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவின் உதவியை நாடி கோகுலகிருஷ்ணனை அ தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கச் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்