முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: ஒபாமாவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க், பருவ நிலை மாற்றம் குறித்து எதிர்மறையான எண்ணங்களை கைவிட்டு நேர்மறையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது மோடி இவ்வாறு கூறினார். அப்போது ஒபாமாகூறுகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவநிலை மாற்றம் குறித்து மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம் அடுத்து வரும் 10ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்கலந்து  கொள்வதற்காக பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அமெரிக்க ஜனாதிபதியும் நானும் பருவ நிலைமாற்றம் குறித்த முடிவுகளில் எந்த சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை. நாங்கள் இருவரும் உயரிய நோக்கம் கொண்ட தேசிய நிகழ்ச்சி திட்டங்களை வைத்துள்ளோம். வருகிற நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவ நிலை மாற்றம் குறித்த உலக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் அவர் பருவ நிலை மாற்றம் குறித்து ஒருமணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாட்டு தலைவர்களும் பருவநிலை மாற்றம் குறித்து முக்கியமாக விவாதித்தார்கள்.தற்போதைய பருவ நிலை மாற்றம் குறித்த விஷயங்கள் எதிர்மறையாக உள்ளன.இத்தகைய எதிர்மாறை நிலை எந்த வித பயனையும் தராது. எனவே வருகிற நவம்பர் மாதம் பாரிசில் நடைபெறும் உலக பருவ நிலைமாற்ற மாநாட்டில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் வலியுறுத்தினார் என்று தெரிவித்தார்.

தங்களது சந்திப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியதாவது, இந்திய பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சு வார்த்தை வரவிருக்கும் பருவ நிலை மாற்றம் குறித்தே இருந்தது என தெரிவித்தார். பருவ நிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடியின் உறுதியான நிலைப்பாடு எங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. தூய்மையான எரிசக்தியை பெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக உள்ளார். வரவிருக்கும் பருவ நிலைமாற்றம் குறித்த உலக மாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம் ஒரு நாளைக்கு மட்டுமல்லாமல்  10ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்