முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, மத்திய அரசு டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது என்று கூறி எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக தற்போது டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏனென்றால் பொது மக்களின் அன்றாடத் தேவைகளில் இன்றைக்கு டீசலும் அத்தியாவசியமாக அமைந்திருக்கிறது.பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையிலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது அதற்கேற்ப உடனடியாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது.

அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைகின்ற போது அதற்கேற்ப உடனடியாக குறைப்பதும் இல்லை; மேலும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைகின்ற அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க முன்வருவதில்லை. இதனால் சதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பொது மக்கள் நலன் கருதி செயல்பட எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் மத்திய பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உயர்த்திய கலால் வரியை ரத்து செய்தால் மக்களின் சுமை குறையும். எண்ணெய் நிறுவனங்கள் இன்றையப் பொருளாதார சூழலை கருத்தில் கொள்ளாமல், மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் தற்போது டீசல் விலையை உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்கள் தற்போது உயர்த்தியிருக்கும் டீசல் விலையை உடனே திரும்ப பெற வலியுறுத்த வேண்டும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும்போது எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தங்கள் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெட்ரோல், டீசல் - விலை உயர்வு, விலை - குறைவு குறித்து தெளிவான, வெளிப்படையான தன்மையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்