முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகள் பயன்படுத்த முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில், கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேம்பட, மாணவ-மாணவியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் கதர் ஆடைகளை அதிகளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கும், கிராமத் தொழில்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, கதர் ஆடைகளுக்கான துணி ரகங்களை நெசவு செய்யும், கிராமப்புற ஏழை, எளிய நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு சீரிய திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.  கிராமப்புறங்களிலுள்ள நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கேற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், அனைத்து கதர் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன - அனைத்து தரப்பு மக்களும் அணிந்திட, உகந்த கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவித்திடும் வகையில், தமிழ்நாடு அரசு, அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடி வழங்கி வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கதர் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு வழி வகை முன்பணமாக 10 கோடி ரூபாய் வழங்கியது - கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் நல வாரியத்தைச் சேர்ந்த 875 உறுப்பினர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வி உதவி, திருமண உதவி, ஈமச் சடங்கு உதவி மற்றும் விபத்தினால் ஏற்படும் இழப்புக்கான உதவியாக 25 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் வழங்கியது - காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்திற்காக, 2015-2016ஆம் நிதியாண்டில் 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த இந்த இனிய நாளில், கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேம்பட மாணவ-மாணவியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் கதர் ஆடைகளையும் அதிகளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்