முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

667 பேரிடம் உடலுறுப்புகள் தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சாதனை

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் 2-வது பேருரையாற்றல் நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் ஆண்டு மலரை வெளியிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

“இந்த அரசின் இலக்கு ஒரு உறுதியான வளமான தமிழகத்தை உருவாக்குவது. ஆகவேதான் மக்கள் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய இரண்டிற்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முக்கியத்துவம் வழங்கி ‘எனது மக்களின் நலனே எனது முதல் குறிக்கோள்’ என கூறியுள்ளார். அதற்காக சுகாதாரத்துறையின் நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்த்தப்பட்டது. இது 2010-11-ல் ஒதுக்கப்பட்ட ரூ.4,395 கோடியைக் காட்டிலும் இரு மடங்காகும். மருத்துவக்கல்வி துறையில், 710 மருத்துவபடிப்பு இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,945-ல் இருந்து 2,655 ஆக உயர்த்தப்பட்டது.முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இத்துறையில் புதிய கருத்துக்கள் மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகியது. இந்த சாதனைகளை மைய அரசு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல தனிப்பட்ட ஆய்வுக் குழுக்களும் பாராட்டுகின்றன.

உறுப்பு மாற்று ஆணையம் முதல்-அமைச்சரின் நேரடி தலைமையில், அவரது ஆணையின்படி உருவாக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஒரு நிர்வாக ஆணையமாக மட்டுமல்லாது நவீன மருத்துவத்தின் பலன்களை தமிழக மக்களுக்கு கொண்டு செல்லும் விஞ்ஞான ஆணையமாகவும் செயல்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் உறுப்பு தானத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. இதுவரை 667 மூளைச் சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து 3,670 உறுப்புகள் தானமாகப் பெற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்ததாக ஆந்திர மாநிலத்தில் இதுவரை 140 நபர்களிடமிருந்து 618 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளது.

இந்த அரசு, யாரும் உறுப்பு கிடைக்காமல் அவதியுறும் நிலை ஏற்படக் கூடாது என்ற குறிக்கோளில் உறுதியாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு மிக உயரிய சிகிச்சை முறைகள் இலவசமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. உலகத்தின் மிகச் சிறந்த மருத்துவத்தை தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளது. இந்த அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்குப்பின் தேவைப்படும் மருந்துகளையும் இலசவசமாக வழங்குகிறது.

தமிழகத்தின் இத்திட்டம் வெற்றியடைய காரணம் அரசின் உறுதியான ஆதரவுதான், இது அரசு மருத்துவமனைகளின் மூலம் பல ஏழை உயிர்களைக் காப்பாற்றுகிறது. இதை முன்னோடியாக கொண்டு மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்.முதல்-அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு அனைத்து வகையான சுகாதாரம், அதற்கான அடிப்படை வசதிகள், ஆரம்ப நிலை சுகாதாரம், இரண்டாம் நிலை சுகாதாரம் மற்றும் உயர்நிலை சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது. மேலும் இதனால் நோய்தடுப்பு சுகாதார முறைகளும் வலுப்பெற்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர் பேராசிரியர் டாக்டர் ரஸ்ஸல் வாக்கர் ஸ்டாங், சுகாதர துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் பி.டபிள்யு.சி.டேவிதார், சிறப்பு செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர்.எஸ். கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் டாக்டர்.ஆ.சந்திரநாதன், ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஜெ.அமலார்பாவநாதன், பேராசிரியர் முகமத்ரிலே, டாக்டர் ஜெ.எம்.எ.புருணோ மாஸ்கரன்காஸ் ஆகியோர் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்