முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் போர்க்குற்றங்கள் : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் ஏற்பு

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் அவையில், இலங்கை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா இந்த விவகாரத்தில் முதல் முறையாக இன்று வாய் திறந்தது.
இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசின் பதிலும், இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும், அமெரிக்க தீர்மானத்தின் மீது கருத்துகளை தெரிவித்தன.ஆனால், அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோர எந்த நாடும் தயாராக இல்லை. எனவே, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது.அமெரிக்காவின் திருத்தப்பட்ட தீர்மானத்தில், போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச நாடுகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் கூடிய விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இலங்கை மட்டுமே, போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்திக்கொள்ள முடியாது. சர்வதேச சமூகத்தின் பங்களிப்பும் இந்த விசாரணையில் இடம்பெறும்.தீர்மானம் நிறைவேறிய பிறகு, சபைக்குள் கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி "இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இலங்கை அரசு அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.

தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கூறுகையில், "இதுவரை இலங்கை போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது, சர்வதேச சமூகத்தின் முன்பாக, இலங்கை அதை ஒப்புக்கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு முன்னேற்றம். ஆனால், தீர்மானத்தோடு இந்த பிரச்சினை நிற்க கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்