முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை போர்க்குற்றங்கள்: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

ஜெனீவா - மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட நீதி விசாரணை அமைப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன. இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போலந்து, மோண்டிநீக்குரோ, கானா, மாசிடோனியா உள்ளிட்ட 25 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.  இத்தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அளித்துள்ள அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும். 
* இதன்படி காமென்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் மற்றும் இலங்கை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
* மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு வழக்கறிஞருடன் கூடிய நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதாக கூறியிருக்கும் இலங்கை அரசின் உறுதிமொழிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இலங்கை அரசின் உறுதிமொழிகளை அமல்படுத்த அந்நாட்டு நீதித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். 
* இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள நிலங்களை உரிமையாளர்களுக்கு விரைவில் திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
* பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். 
* காணாமல் போனவர்கள் பற்றிய சர்வதேச சட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். 
* 13-வது அரசியல் சட்ட திருத்தப்படி அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
* இந்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயல்படுத்துவதை ஐ. நா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
* 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் நடத்த வேண்டும்.
அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியா கருத்து:
தீர்மானம் நிறைவேறிய பிறகு இந்திய பிரதிநிதி பேசியபோது,  தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்க ளுக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும். இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கருத்து., 

இந்த தீர்மானம் குறித்து இலங்கையின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் நிருபர்களிடம் கூறியபோது, தீர்மானத்தில் சில சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இது வலு குறைந்த தீர்மானம் என்றே கருதுகிறோம். எனினும் புதிய விசாரணைக் குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்