முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் குழந்தைகளுக்கு அலவன்ஸ்: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில், குழந்தைகளுக்கு அதற்கான அலவன்சு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களின்கீழ் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பள்ளி வேலைநாட்களில் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மதிய உணவு திட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடத்தப்படுகிற பள்ளிகள், சர்வ சிக்ஷா அபியான் திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட பள்ளிகள் என சுமார் 12 லட்சத்து 65 ஆயிரம் பள்ளிகளில் சுமார் 12 கோடி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இலவச மதிய உணவு திட்டம் என்பது உலகிலேயே மிகப்பெரிய திட்டம் எனக் கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், இந்த திட்ட அமலாக்கம்பற்றி புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்தது.

தற்போது அதனை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன., உணவு தானியங்கள் இல்லை என்றோ, எரிபொருள் இல்லை என்றோ, சமையல் பணியாளர்கள் இல்லை என்றோ அல்லது பிற என்ன காரணத்தினாலாவது பள்ளியில் எந்தவொரு வேலை நாளிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்காவிட்டால், அடுத்த மாதத்தின் 15-ந்தேதிக்குள் அவர்களுக்கு மாநில அரசு, உணவு பாதுகாப்பு அலவன்சு வழங்க வேண்டும்.

எந்தவொரு காரணத்தினாலும், குழந்தைகள் தாமாக மதிய உணவு சாப்பிடவில்லை என்றால், அதற்காக உணவு பாதுகாப்பு அலவன்சு வழங்க வேண்டியதில்லை தொடர்ந்து 3 நாட்களோ அல்லது ஒரு மாதத்தில் 5 நாட்களோ மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அதற்கு யார் பொறுப்பு என கண்டறியப்பட வேண்டும். மதிய உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசு உணவு ஆராய்ச்சி கூடங்களில், அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை, மதிய உணவு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். மாதம் ஒரு பள்ளி என தேர்ந்தெடுத்து உணவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் உணவு தானியம் இல்லை என்றாலோ, சமையல் செலவுக்கு பணம் இல்லை என்றாலோ பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள பிற நிதிகளை பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கப்படுகிறது.

பின்னர் மதிய உணவு நிதி வந்தவுடன் அதில் இருந்து செலவு செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைப்பதற்கான வசதி செய்திருக்கப்படவேண்டும். நகரங்களை பொறுத்தமட்டில் மைய சமையல்கூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்வி உரிமைச்சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாக குழு, மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்