முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் மழை நீடிக்கும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முன்தீனம் இ ரவு நகரின் பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கோயம்பேடு, மயிலாப்பூர், அடையார், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி உள்பட பல பகுதிகளில் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

காற்றுடன் மழை பெய்ததால் அம்பத்தூர் ராஜீவ்நகர், பானுநகர், முகப்பேர், எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. விடிய விடிய மழை தூறல்கள் விழுந்தபடி இருந்ததால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி கிடந்தது. இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 27.4 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. இரவில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ததாகவும், இன்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மைய அதிகாரிகள் கூறினர்.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிட்டதட்ட 25 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குமரியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 25 வீடுகள் இடிந்து விழுந்தன. சென்னையில் நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியதால் மயிலாப்பூரில் மரம் ஒன்று முறிந்து நின்றிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் சேதமடைந்தது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், வண்ணாரப்படே்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு:– கேளம்பாக்கம் 9 செ.மீ.,சத்யபாமா பல்கலை கழகம், பள்ளிப்பட்டு, எண்ணூர் 7 செ.மீ., திருச்சி விமான நிலையம், திருவலங்காடு, கீரனூர், மேலஆலத்தூர், திருச்சி 6 செ.மீ., காட்டுகுப்பம், கலவை, குடியாத்தம், திருத்தணி, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், பூண்டி 5 செ.மீ., வாலஜா, பெனூகொண்டாபுரம், ஆவடி, பூந்தமல்லி, சோழாவரம், ஆர்.கே.பேட்டை 4 செ.மீ., மயிலாடி, புழல், சோளிங்கர், வல்லம், செங்குன்றம், டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம், மயிலம், கன்னியாகுமரி, சென்னை விமானநிலையம், காஞ்சிபுரம், வேலூர், தரமணி 3 செ.மீ. மழை பதி வாகியுள்ளது. இதுதவிர மாநிலத்தில் பல பகுதிகளில் 2 செ.மீ.,1 செ.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்