முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது தொண்டை அடைப்பான், இரனஜன்னி நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரனஜன்னி, தட்டம்மை, நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் முதல் கட்டமாக 7.4.2015–ல் துவக்கப்பட்டு 1.38 லட்சம் குழந்தைகளும் 28,000 கர்ப்பிணித் தாய்மார்களும் தடுப்பூசி மூலம் பயனடைந்துள்ளனர்.

இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் இம்முகாம்கள் 19 மாவட்டங்களில் நாளை (7–ந் தேதி) முதல் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இம்முகாம்களை சிறப்பாக நடத்துவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஊடகப்பிரதிநிதிகள் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்பொழுது குறிப்பிட்டதாவது:–

முதலமைச்சர் அம்மாவின் சீரிய வழிகாட்டுதலின்படி இரண்டாம் கட்டமாக இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், நாகர்கோவில், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் விழுப்புரம் ஆகிய பத்தொன்பது மாவட்டங்களில் 7.10.2015 முதல் 14.10.2015 வரை நடைபெறவுள்ளது.
மேலும் இம்முகாம்கள் 7.-11.-2015 முதல் 16.-11.-2015 வரையிலும், 7.-12.-2015 முதல் 14.-12.-2015 வரையிலும், 7-.1.-2016 முதல் 14-.1.-2016 வரையிலும் நடைபெறும்.

இந்த மாவட்டங்களில் தடுப்பூசிகள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். அனைத்து பிறந்த குழந்தைகள் முதல் 2 வயதிற்குட்பட்ட, விடுபட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி போடப்படும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும்.

நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாவின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து, தமிழ்நாட்டில் போலியோ, தொண்டை அடைப்பான், இரனஜன்னி போன்ற நோய்கள் இல்லாத நிலைமையை தக்க வைத்துக் கொள்வதும், குழந்தைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்மாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்திலிருந்து காசநோய், போலியோ, மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரனஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க, தடுக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், திட்டச்செயலாக்கம் மற்றும் முகாம் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் மருந்து துறையின் இயக்குநர் டாக்டர்.கே.குழந்தைசாமி வரவேற்று பேசினார். தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஷம்பு கலோலிகர், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.எஸ்.கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் எ.சந்திரநாதன் மற்றும் சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்